நாச்சியார் திருமொழி – பட்டி மேய்ந்து

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (1)

அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (2)

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் விநதை சிறுவன் சிறகென்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (3)

கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின்குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (4)

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே
பீதக ஆடை உடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (5)

தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தமிலியைக் கண்டீரே
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே (6)

பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித்தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (7)

வெளிய சங்கொன்றுடையானைப் பீதக ஆடை உடையானை
அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே
களிவண்டு எங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (8)

நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (9)

பருந்தாட்களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ்ப் பிரியாதென்றும் இருப்பாரே (10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *