புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் – பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் – புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் – திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் – தரவேணும்
தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் – துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் – றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் – தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பூரண வார கும்ப (திருச்செந்தூர்) – திருப்புகழ் 82