ஆடி மாதத்தில் அம்பாளுக்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆடிப்பூரம் மிகவும் போற்றப்படுகிறது. ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். புராணங்களின்படி, அம்மன் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றினார். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம் தான். இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடி மாதம் பூர நட்சத்திரம் உச்சம் அடையும் போது ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
இது அம்பாளுக்குரிய திருவிழா. உமாதேவியும் இந்நாளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் விளங்கினார். இந்த நாளில் தான் சித்தர்களும் யோகிகளும் தவத்தை ஆரம்பிக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
அனைத்து உலகங்களையும் படைத்து காக்கும் உலக அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். எல்லோருக்கும் அருள் புரியும் அன்னைக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்நாளில் திருவாடிப்பூரம் பலவிதமாக அன்னையைக் கொண்டாடுகிறார்கள்.
ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வளையல்களை பெண்கள் வாங்கி அணிந்தால் அவர்களின் இல்லங்களில் சுப காரியங்கள் நடக்கும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி மகிழ்ச்சியாக இருந்தால், உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாம் : ஆடிப்பூரம் 2024 எப்போது?