முகிலாமெனு மளகங் காட்டி
மதிபோலுயர் நுதலுங் காட்டி
முகிழாகிய நகையுங் காட்டி – அமுதூறு
மொழியாகிய மதுரங் காட்டி
விழியாகிய கணையுங் காட்டி
முகமாகிய கமலங் காட்டி – மலைபோலே
வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை வளையுங் காட்டி – யிதமான
மணிசேர்கடி தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி – லுழல்வேனோ
நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலநேயரு ளமர்செந் தூர்க்கு – ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு – முருகோனே
அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி – முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை முழுதுங் காத்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : முந்துதமிழ் மாலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 91