ஆனபய பத்தி வழிபாடு பெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்
ஆரமதுரித்த கனி காரண முதற்றமைய
னாருடன் உணக்கைபரி தீமைக் காரனும்
ஆகமம் விளைத்த அகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்
ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய அநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க அம
ராவதிபுரக்குமடல் ஆண்மைக் காரனும்
ஆடக விசித்ரகன கோபுர முகப்பில்அரு
ணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்
ஆயிர முகத்துநதி பாலனும் மகத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும்
ஆதிமுடிவற்ற திருநாமக் காரனும்
யானென தெனச்சருவும் ஈன சமயத்தெவரும்
யாரும் உணர்தற்கரிய நேர்மைக் காரனும்
யாது நிலையற்றலையும் ஏழு பிறவிக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும்
ஏரகம் இடைக்கழி சிராமலை திருப்பழநி
யேரணி செருத்தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டைவினை யாய தொருடற் சிறையி
ராமல் விடு வித்தருள் நியாயக்காரனும்
யாமளை மணக்குமுக சாமளை மணிக்குயிலை
யாயென அழைத்துருகு நேயக் காரனும்
ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாக முநிவர்க்குரிய காவற் காரனும்
ஈரிரு மருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ் கடப்பமலர் கூதள முடிக்கும்இளை
யோனும் அறிவிற் பெரிய மேன்மைக் காரனும்
வானவர் பொருட்டு மகவானது பொருட்டுமலர்
வாவியில் உதித்தமுக மாயக் காரனும்
வாரண பதிக்குதவு நாரணன் உவக்குமரு
மானும் அயனைக்கறுவு கோபக் காரனும்
வாழியென நித்த மறவாது பரவிற்சரண
வாரிசம் அளிக்கும் உபகாரக் காரனும்
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரியிற் கடவுள் ஆயக் காரனும்
வாளெயிறதுற்றபகு வாய்தொறு நெருப்புமிழும்
வாசுகி யெடுத்துதறும் வாசிக் காரனும்
வாளகிரியைத் தனது தாளில் இடியப்பொருது
வாகைபுனை குக்குட பதாகைக் காரனும்
மாசிலுயிருக்குயிரு மாசில் உணர்வுக் குணர்வும்
வானில் அணுவுக்கணுவு பாயக் காரனும்
வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்படம
காடவியில் நிற்பதொர் சகாயக் காரனும்
மீனவனு மிக்க புலவோருமுறை பொற்பலகை
மீதமர் தமிழ்த்ரய விநோதக் காரனும்
வேரிமது மத்தமதி தாதகி க டுக்கைபுனை
வேணியர் து திப்பதொரு கேள்விக் காரனும்
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகை குமாரனு நினைக்குமவர்
வீடுபெற வைத்தருள் உதாரக் காரனும்
மேனை யரிவைக்குரிய பேரனு மதித்ததிறல்
வீரனும் அ ரக்கர்குல சூறைக் காரனும்
வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும் வி
சாகனும் விகற்ப வெகுரூபக் காரனும்
வேடுவர் புனத்திலுருமாறி முனி சொற்படிவி
யாகுல மனத்தினொடு போம்விற்காரனும்
மேவிய புனத்திதணில் ஓவியம் எனத்திகழு
மேதகு குறத்தி திருவேளைக் காரனே.