வேடிச்சி காவலன் வகுப்பு

உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும்
உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும்

உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய
உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும்

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும்

உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும்

உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர
னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும்

உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்;

உரககண சித்தகண கருடகண யக்ஷகணம்
உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும்

ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும்
உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும்

அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும்

அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ
டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும்

அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும்

அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்

அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப்பொழுதின் வாழ்வித்தவேதியனும்

அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும்
அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனும்

அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும்
அகிலபுவ னத்தமர சேனைக்கு நாயகனும்

அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும்அநு பூதிச் சுகோதயனும்

இதமகிதம் விட்டுருகி இரவுபக லற்றஇடம்
எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும்

எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை
யமன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும்

எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனேன
இனிதுகவி யப்படிப்ர சாதித்த பாவலனும்

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்புமென
திதயமு மணக்குமிரு பாதச் சரோருகனும்

எழுதரிய கற்பதரு நிழலில்வளர் தத்தைதழு
வியகடக வஜ்ரஅதி பாரப் புயாசலனும்

எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்

எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள்
இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும்

இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ்களனும்
இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும்

மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி யப்புவியை
வளையவரும் விக்ரமக லாபச் சிகாவலனும்

வலியநிக ளத்தினொடு மறுகுசிறை பட்டொழிய
வனஜமுனி யைச்சிறிது கோபித்த காவலனும்

வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன
வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும்

வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும்
மநுபவன சித்தனும நோதுக்க பேதனனும்

வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும்
மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும்

மரகதம ணிப்பணியின் அணிதழை உடுத்துலவும்
வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்

மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும்
மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனனும்

வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின்
மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே.

சேவகன் வகுப்பு – திருவகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *