வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின
மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர
சேனை தேடி விததிபெ றச்சில
கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின
எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ
தார தீரம் என உரை பெற்றஅ
டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென ஒத்துல
கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி
பார கோர இவுளிமு கத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவனுதி ரப்புனல்
செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன
எவையெவை கருதில் அவையவை தருகொடை
யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை யுடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன
அகிலமும் எனது செயலல திலையென யானென
வீறு கூறி அறவுமி குத்தெழும்
ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசுகொ டுத்தப
யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சைய
லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி
மாலை யாக அடிமைதொ டுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன்
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ச லெ ன்ப்ர சண்ட வாகைப் புயங்களே.