வரலட்சுமி விரத நாள் என்பது செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை வீட்டிற்கு வரவேற்கும் நாளாகும். வரலட்சுமி விரதம் மகாலட்சுமியை வழிபடும் சிறப்பு வாய்ந்த விரதம். இந்த விரதத்தை திருமணமான மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இருவரும் அனுஷ்டிக்கலாம்.
ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் குடும்பங்கள் வறுமை, திருமணத்தடை ஏற்படாது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு வரலட்சுமி விரத தினம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் ( 16/8/2024 ) வருகிறது.
வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?
வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி தூய்மையை விரும்புகிறாள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போடவும். நாளை விரதம் இருப்பதால், இன்று வியாழக்கிழமை மாலை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதத்தை உங்கள் வசதிக்கேற்ப வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் அனுஷ்டிக்கலாம்.வரலட்சுமி பூஜை விரதத்தில் பங்கேற்பவர்கள் சில உணவுகளை உண்ணலாம். வாழைப்பழம் உடல் வலிமையை வளர்க்க மிகவும் உதவும் ஒரு பழம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது மற்றும் இயற்கையான குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உண்ணாவிரதம் இருப்பவர்கள் சாப்பிடலாம். விரதம் இருப்பவர்கள் சுத்தமானதாகக் கருதப்படும் ஒரு டம்ளர் பால் அருந்தலாம். பால் குடிக்காதவர்கள் பழச்சாறு அல்லது துளசி தீர்த்தம் சாப்பிடலாம்.
பூஜையின் கலசத்தை மகாலட்சுமி போல் அலங்கரிக்க வேண்டும். மனைப்பலகையில் கும்பம் வைத்து, கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மனின் முகத்தையும் கிரீடத்தையும் வைக்கவும். மேலும் ஆடை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து அலங்கரிக்கவும். கலசத்தின் முன் நிவேதனப் பொருட்களான பழம், வெற்றிலை, பாக்கு, பொங்கல், பாயாசம், நெய், வடை வைக்க வேண்டும்.
பின்னர், அதை வீட்டின் வாசலில் வைத்து, கலசத்தில் எழுந்தருளுமாறு மகாலட்சுமியை வேண்டிக்கொள்ளுங்கள். அதன் பிறகு, வாசலுக்கு உள்நிலைப்படி அருகில் நின்று, கற்பூர ஆரத்தியை வெளியில் காட்டி, மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாம் : வரலட்சுமி நோன்பு கயிறு கட்டும் மந்திரம்..!
இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டாள். தாயாருக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். பிறகு மங்கள மந்திரத்தை சொல்லலாம். மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பாடலாம்.
பின்னர், நோன்பு கயிற்றை கும்பத்தில் வைத்து பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும். லட்சுமி 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். “அம்மா மஹாலக்ஷ்மி எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும், உங்கள் எல்லா செல்வங்களையும் எங்களுக்கு நீ தர வேண்டும் என மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு பூஜையை முடிக்கவும். குடும்பத்தில் மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம்பெண்கள் அவருடைய ஆசி பெற வேண்டும். பூஜையின் போது வைக்கப்படும் நோன்புச்சரடை மஞ்சள் குங்குமப்பூவுடன் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
லட்சுமி பூஜைக்கு முன் கண்டிப்பாக விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களை வரலட்சுமி பூஜைக்கு கட்டாயம் அழைக்க வேண்டும். பூஜையில் பங்கேற்கும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி கொடுத்து ஆசிர்வதிக்க வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
வரலட்சுமி அன்று கலசம் அமைத்து அம்மனின் முகம் வைத்து வழிபடுவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் வெற்றிலை பாக்கு மற்றும் 2 வாழைப்பழங்களை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் மற்ற வீடுகளில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு அன்னையிடம் ஆசி பெறலாம்.
இதையும் படிக்கலாம் : லட்சுமி அஷ்டோத்திரம்..!