கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி – யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை – மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் – மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் – புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய – தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு – முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு – மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கரியிணை கோடென (பழனி) – திருப்புகழ் 131