கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து – மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து – மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று – மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி – யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த – மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று – வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த – குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கலக வாள்விழி (பழனி) – திருப்புகழ் 135