கனத்திறுகி (பழனி) – திருப்புகழ் 142

கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் – தலமேராய்

கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் – களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற் – றயர்வாலே

சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் – கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக் – குகவீரா

பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் – திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் – துடையோனே

செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : திருப்புகழ் 1 – 110

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *