
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி – யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை – யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது – மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத – மருள்வாயே
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு – மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு – முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு – மணவாளா
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சீ உதிரம் எங்கும் (பழநி) – திருப்புகழ் 158