வாதம் பித்தம் (பழனி) – திருப்புகழ் 196

வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் – குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் – வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென – இதின்மேவித்

தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி – னருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட – வெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு – மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய – முருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வாரணந் தனை (பழனி) – திருப்புகழ் 197

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *