
திருப்புகழ் 104 அகல்வினை (பழனி)
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன – மவிகார
அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு – மொருபோதன்
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ – மயமாநின்
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ – தொருநாளே
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள் – கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத – வியவேளே
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் – மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய – பெருமாளே.
திருப்புகழ் 105 அணிபட்டு அணுகி (பழனி)
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் – கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் – கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் – றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் – தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் – றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் – திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் – பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 106 அதல விதல (பழனி)
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென – அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு – சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை – வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை – நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு – திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக – என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண – துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் – தம்பிரானே.
திருப்புகழ் 107 அபகார நிந்தை (பழனி)
அபகார நிந்தைபட் – டுழலாதே
அறியாத வஞ்சரைக் – குறியாதே
உபதேச மந்திரப் – பொருளாலே
உனைநானி னைந்தருட் – பெறுவேனோ
இபமாமு கன்தனக் – கிளையோனே
இமவான்ம டந்தையுத் – தமிபாலா
ஜெபமாலை தந்தசற் – குருநாதா
திருவாவி னன்குடிப் – பெருமாளே.
திருப்புகழ் 108 அரிசன வாடை (பழனி)
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் – சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் – டலர்வேளின்
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்
தருணக லாரத் தோடை தரித்துத்
தொழிலிடு தோளுக் கேற வரித்திட் – டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்
றுயரற வேபொற் பாத மெனக்குத் – தருவாயே
கிரியலை வாரிச் சூர ரிரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் – தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் – தருவோனே
பரிமள நீபத் தாரொ டுவெட்சித்
தொடைபுனை சேவற் கேத னதுத்திப்
பணியகல் பீடத் தோகை மயிற்பொற் – பரியோனே
பனிமல ரோடைச் சேலு களித்துக்
ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் – பெருமாளே.
திருப்புகழ் 109 அருத்தி வாழ்வொடு (பழனி)
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு – முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு – வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது – நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது – தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக – வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக – ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு – தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை – பெருமாளே.
திருப்புகழ் 110 அவனிதனிலே (பழனி)
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து – இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து – பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து – துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற – னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த – மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க – வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த – கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 111 அறமிலா நிலை (பழனி)
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து – விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை – வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த – மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி – தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை – மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர – வடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி – யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற – பெருமாளே.
திருப்புகழ் 112 ஆதாளிகள் புரி (பழனி)
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு – மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி – குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை – யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் – புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற – மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு – திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய – குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் – பெருமாளே.
திருப்புகழ் 113 ஆலகாலம் என (பழனி)
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட – னிளைஞோரை
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி – விதமாகச்
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டும ருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி – மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட – அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு
வால வாயன ளித்தரு ளற்புத – முருகோனே
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் – மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு – வருவோனே
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள் – பெருமாளே.
திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம் (பழனி)
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் – என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய – தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன – தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு – மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை – தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும – டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி – அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக – தம்பிரானே.
திருப்புகழ் 115 இத் தாரணிக்குள் (பழனி)
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க – ளுடனுறவாகி
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில – பிணியதுமூடிச்
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென – எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர – இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென – ஒருமயிலேறித்
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் – அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய – மருமகனாகி
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி – வருபெருமாளே.
திருப்புகழ் 116 இரவி என (பழனி)
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி – லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு – வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக – மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை – வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் – மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை – யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக – மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் – பெருமாளே.
திருப்புகழ் 117 இருகனக மாமேரு (பழனி)
இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு – குவடேயோ
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து – தணியாமல்
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து – நிலைகாணாப்
பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று – திரிவேனோ
கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை – யருள்பாலா
கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு – புரிவோனே
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக வேமயிலில் வந்த – குமரேசா
பலமலர்க ளேதூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு – பெருமாளே.
திருப்புகழ் 118 இரு செப்பென (பழனி)
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் – திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் – குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் – றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் – கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் – துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் – பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் – பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 119 இலகிய களப (பழனி)
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை – யிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது – பகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக – சிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 120 இலகுகனி மிஞ்சு (பழனி)
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு – முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு – மயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து – மதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து – படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த – கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த – தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த – குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த – பெருமாளே.
திருப்புகழ் 121 உயிர்க் கூடு (பழனி)
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை – யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ – ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் – விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை – வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி – மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் – தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி – யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி – பெருமாளே.
திருப்புகழ் 122 உலகபசு பாச (பழனி)
உலகபசு பாச தொந்த – மதுவான
உறவுகிளை தாயர் தந்தை – மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச – லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற – னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை – யணிசேயே
சரவணப வாமு குந்தன் – மருகோனே
பலகலைசி வாக மங்கள் – பயில்வோனே
பழநிமலை வாழ வந்த – பெருமாளே.
திருப்புகழ் 123 ஒருபொழுதும் இருசரண (பழனி)
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் – துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் – தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் – குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் – தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் – பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் – பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் – பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் – பெருமாளே.
திருப்புகழ் 124 ஒருவரை ஒருவர் (பழனி)
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத – பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ – ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல – மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத – மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான – குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத – னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான – அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு – பெருமாளே.
திருப்புகழ் 125 ஓடி ஓடி (பழனி)
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு – ளதுகோதி
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில்
நேச மாகி யணைத்தசி றுக்கிக – ளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி
னாத கீத மலர்த்துளி பெற்றளி – யிசைபாடுங்
கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
காவுர் நாட தனிற்பழ நிப்பதி
கோதி லாத குறத்திய ணைத்தருள் – பெருமாளே.
திருப்புகழ் 126 கடலைச் சிறை (பழனி)
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் – பவனூணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் – பினின்மேவி
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் – தசகோரம்
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் – படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் – பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் – தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் – குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 127 கடலை பொரியவரை (பழனி)
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர – விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது – துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத – மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித – மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட – எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண – பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி – அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு – பெருமாளே.
திருப்புகழ் 128 கதியை விலக்கு (பழனி)
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு – மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு – முகமாறும்
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு – முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு – மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய – குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் – மருகோனே
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர – சுரலோக
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 129 கரிய பெரிய (பழனி)
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய – திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி – யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி – யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் – தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு – முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி – யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை – யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய – பெருமாளே.
திருப்புகழ் 130 கரிய மேகமதோ (பழனி)
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி – யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை – மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் – மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் – புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய – தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு – முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு – மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை – பெருமாளே.
திருப்புகழ் 131 கரியிணை கோடென (பழனி)
கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் – பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் – தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் – பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் – தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் – புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோடவிட் – டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் – கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் – பெருமாளே.
திருப்புகழ் 132 கருகி அகன்று (பழனி)
கருகிய கன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று – துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு – பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று – தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று – பெறுவேனோ
முருகக டம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் – முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற – வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி – மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 133 கருப்புவிலில் (பழனி)
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் – மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் – மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு – அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு – முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு – முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி – வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் – குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய – பெருமாளே.
திருப்புகழ் 134 கருவின் உருவாகி (பழனி)
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து – மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து – மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று – மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி – யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த – மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று – வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த – குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற – பெருமாளே.
திருப்புகழ் 135 கலக வாள்விழி (பழனி)
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ – துவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ – இடைதானும்
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி னாரே பாரீ – ரெனமாதர்
இருகண் மாயையி லேமூழ் காதே
யுனது காவிய நூலா ராய்வே
னிடர்ப டாதருள் வாழ்வே நீயே – தரவேணும்
அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய் நீபார் – மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா – கலவீரா
வலபை கேள்வர்பி னானாய் கானார்
குறவர் மாதும ணாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா – மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் – பெருமாளே.
திருப்புகழ் 136 கலகக் கயல்விழி (பழனி)
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய – விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள் – தரவேணும்
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய – வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர – முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய – சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு – முரியோனே
பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய – வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் – பெருமாளே.
திருப்புகழ் 137 கலவியி லிச்சி (பழனி)
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு – மின்பமூறிக்
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
மவசமி குத்துப் பொருந்தி யின்புறு
கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை – யங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி – லங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் – மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் – கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய – செங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு – கின்றபாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித் துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் – தம்பிரானே.
திருப்புகழ் 138 கலை கொடு (பழனி)
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் – உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க – ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான – வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ – தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய – முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை – விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு – மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் – பெருமாளே.
திருப்புகழ் 139 களப முலையை (பழனி)
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் – குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
கடியிருளு டுக்கு லங்க – ளெனவீழ
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று – விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி – மெலிவேனோ
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த – குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க – ளருள்வோனே
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த – குகவேலா
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
குறவர்மக ளைப்பு ணர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 140 கறுத்த குழலணி (பழனி)
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் – சிரமான
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்மைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் – கொடிபோலச்
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் – சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் – தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் – குருநாதா
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட் – கதிர்வேலா
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் – றிருபாதா
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் – பெருமாளே.
திருப்புகழ் 141 கனக கும்பம் (பழனி)
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய – முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை – யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டுது வண்ட வாசையில் – நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள் – தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென – வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு – முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக – என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய – தம்பிரானே.
திருப்புகழ் 142 கனத்திறுகி (பழனி)
கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் – தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் – களிகூருந்
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற் – றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் – கடவேனோ
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக் – குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் – திடுநாதா
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் – துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 143 கனமாய் எழுந்து (பழனி)
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் – திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் – டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் – கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் – புகழ்வேனோ
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
புணர்கா தல்கொண்டஅக் – கிழவோனே
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் – கிரவீரா
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
சிறுகீ தசெம்பதத் – தருளாளா
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் – பெருமாளே.
திருப்புகழ் 144 கார் அணிந்த (பழனி)
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் – தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் – தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் – கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் – தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் – பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் – றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் – குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் – பெருமாளே.
திருப்புகழ் 145 குரம்பை மலசலம் (பழனி)
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல – கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை – விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு – மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு – மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் – வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் – விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் – குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய – பெருமாளே.
திருப்புகழ் 146 குருதி மலசலம் (பழனி)
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி – யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை – யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் – மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத – மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவிய – கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி – மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ – ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய – பெருமாளே.
திருப்புகழ் 147 குழல் அடவி (பழனி)
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு – றுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை – கிரிசூது
விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட – மெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன – முறலாமோ
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் – மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த – கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு – கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் – பெருமாளே.
திருப்புகழ் 148 குழல்கள் சரிய (பழனி)
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ – களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி – னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய – மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் – உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் – அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி – யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ – முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு – பெருமாளே.
திருப்புகழ் 149 குறித்தமணி (பழனி)
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் – பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் – குறியாலே
பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் – திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் – தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத் – திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் – கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப் – பெருவாழ்வே
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 150 குன்றுங் குன்றும் (பழனி)
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் – விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் – மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன – மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் – மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை – யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை – புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு – திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய – பெருமாளே.
திருப்புகழ் 151 கொந்துத் தரு (பழனி)
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ – விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ – எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப் படிபயில் நடமா டியபா – விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ – ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே – தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே – லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் – கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் – பெருமாளே.
திருப்புகழ் 152 கோல குங்கும (பழனி)
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் – கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் – பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் – பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் – தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் – தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் – தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங் – குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினி னிற்கும் – பெருமாளே.
திருப்புகழ் 153 கோல மதிவதனம் (பழனி)
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள – முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் – கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு – மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது – மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர – முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர – புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக – மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் – பெருமாளே.
திருப்புகழ் 154 சகடத்திற் குழை (பழனி)
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் – குவடான
தனதுத்திப் படிகப் பொற்பிட்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் – கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் – கிடைநாளிற்
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் – சடமாமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் – டிடிபேரி
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் – டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் – தருள்வோனே
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் – பெருமாளே.
திருப்புகழ் 155 சிந்துர கூரம (பழனி)
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக மாலைமு டித்துப் பண்புள – தெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி – விலைமாதர்
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை – தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத – மருள்வாயே
இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட் டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு – ளொருபேடி
இன்கன தேரைந டத்திச் செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு – மருகோனே
சந்திர சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள் – குருநாதா
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய – பெருமாளே.
திருப்புகழ் 156 சிவனார் மனங்குளிர (பழனி)
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் – குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் – நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென – வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது – புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் – மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு – விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் – வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் – பெருமாளே.
திருப்புகழ் 157 சிறு பறையும் (பழனி)
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி – யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை – யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது – மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத – மருள்வாயே
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு – மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு – முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு – மணவாளா
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு – பெருமாளே.
திருப்புகழ் 158 சீ உதிரம் எங்கும் (பழனி)
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப – தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து – நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று – மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு – புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை – யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற – நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து – பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் – பெருமாளே.
திருப்புகழ் 159 சீறல் அசடன் (பழனி)
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி – பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி – எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு – னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் – புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி – புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய – முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை – யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் – பெருமாளே.
திருப்புகழ் 160 சுருதி முடி மோனம் (பழனி)
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத – லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய – உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் – வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன – தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம – ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு – குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு – திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் – பெருமாளே.
திருப்புகழ் 161 சுருளளக பார (பழனி)
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு – மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு – னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து – நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த – அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து – பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற – னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் – மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 162 ஞானங்கொள் (பழனி)
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய – வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி – விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி – யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட – அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை – ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத – னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு – முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு – பெருமாளே.
திருப்புகழ் 163 தகர நறுமலர் (பழனி)
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு – வதனாலே
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு – துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன – திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர – இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் – மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி – மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் – புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் – பெருமாளே.
திருப்புகழ் 164 தகைமைத் தனியில் (பழனி)
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் – பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் – கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் – பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் – றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் – திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் – குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் – பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 165 தமரும் அமரும் (பழனி)
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் – அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய – எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு – மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு – தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி – மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி – மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் – தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய – பெருமாளே.
திருப்புகழ் 166 தலைவலி மருத்தீடு (பழனி)
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி – யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் – விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க – ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை – வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு – மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் – வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு – மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் – பெருமாளே.
திருப்புகழ் 167 திடமிலி சற்குணமிலி (பழனி)
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் – புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் – கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் – றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் – பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் – பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் – கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் – கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் – பெருமாளே.
திருப்புகழ் 168 திமிர உததி (பழனி)
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் – விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு – மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் – வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் – வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள – மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை – விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் – மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் – பெருமாளே.
திருப்புகழ் 169 தோகைமயிலே கமல (பழனி)
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு – துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக – மயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி – யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் – தருவாயே
மாகமுக டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது – கடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய – மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன – துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் – பெருமாளே.
திருப்புகழ் 170 நாத விந்து (பழனி)
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம – வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம – பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம – கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம – அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு – மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக – வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி – லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் – பெருமாளே.
திருப்புகழ் 171 நிகமம் எனில் (பழனி)
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள – பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு – முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு – நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர – அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு – மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் – கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை – மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ – பெருமாளே.
திருப்புகழ் 172 நெற்றி வெயர்த்துளி (பழனி)
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் – மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு – முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க – ளுறவாமோ
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர – வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர – எனநாளும்
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு – மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 173 பகர்தற்கு அரிதான (பழனி)
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை -யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி – விரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் – மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் – புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு – மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் – மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு – குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் – பெருமாளே.
திருப்புகழ் 174 பஞ்ச பாதகன் (பழனி)
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை – பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு – சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக – ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் – புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி – முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை – யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர – அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர – பெருமாளே.
திருப்புகழ் 175 பாரியான கொடை (பழனி)
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக – அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனவுத் துங்க மானத – எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் – வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு – குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய – அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன் – மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன – முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் – பெருமாளே.
திருப்புகழ் 176 புடவிக்கு அணி (பழனி)
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் – சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் – தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் – குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் – கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் – தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் – குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் – பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் – பெருமாளே.
திருப்புகழ் 177 புடைசெப் பென (பழனி)
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் – திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் – டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் – கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் – புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் – கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் – பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் – புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் – பெருமாளே.
திருப்புகழ் 178 பெரியதோர் கரி (பழனி)
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு – மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ – வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் – மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம – தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமர்புரி கின்ற கூரிய – வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண – முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் – மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 179 போதகம் தரு (பழனி)
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம – பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ாமீ நமோநம – அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம – அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம – அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர – அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் – கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி – அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் – பெருமாளே.
மந்தரமதெனவே (பழனி) – திருப்புகழ் 180
மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க – வகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து – தொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமா தர்தங்கள் – மனைதேடி
எஞ்சிமன முழலா மலுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதா ளஇன்று – வரவேணும்
விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மே வுமெந்தை – புதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த – முருகோனே
திருப்புகழ் 181 மருமலரினன் (பழனி)
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் – வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் – வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி – யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று – பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை – நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற – பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் – மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 182 மனக்கவலை ஏதும் (பழனி)
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் – தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் – பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் – முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க – வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த – முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற – முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த – பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த – பெருமாளே.
திருப்புகழ் 183 மலரணி கொண்டை (பழனி)
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக – மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி – வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு – மொயிலாலே
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு – மதிகேடாய்
அலையநி னைந்துற் பநத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி லேவர
அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் – உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய
மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ – அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு – மணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
பழநியி லன்புற் றிருக்கும் வானவர் – பெருமாளே.
திருப்புகழ் 184 முகிலளகத்தில் (பழனி)
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய – ரங்கமீதே
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை – யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி – லொன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ – ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு – மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை – யண்டமீதே
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி – யன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் – தம்பிரானே.
திருப்புகழ் 185 முகை முளரி (பழனி)
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார – மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் – தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி – மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான – மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை – விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர – முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு – மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு – பெருமாளே.
திருப்புகழ் 186 முதிரவுழையை (பழனி)
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி – னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி – வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி – விடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை – யருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த – தகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் – மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து – வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து – பெருமாளே.
திருப்புகழ் 187 முத்துக்கு (பழனி)
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
முற்பக்கத் திற்பொற் புற்றிட – நுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழ – கெழிலாடத்
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக் கக்கச் சுப்பெறு – தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி – யுழல்வேனோ
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர – மருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
முக்கட்சித் தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக் கத்திகை – புனைவோனே
நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் – அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
நிக்குட்பட் டத்துக் குற்றுறை – பெருமாளே.
திருப்புகழ் 188 மூலம் கிளர் ஓர் (பழனி)
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய – முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள – விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ – மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் – அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு – முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக – மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட – மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 189 மூல மந்திரம் (பழனி)
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை – மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் – பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட – நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் – புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு – ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு – முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி – குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் – பெருமாளே.
திருப்புகழ் 190 முருகுசெறி குழலவிழ (பழனி)
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ – அநுராகம்
முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு – துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் – குழையேற
அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை – மறவேனே
நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் – வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக – டுறைவோனே
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி – மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு – பெருமாளே.
திருப்புகழ் 191 முருகு செறிகுழல் முகில் (பழனி)
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென – இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென – மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை – யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் – புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ – னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் – விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு – முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் – பெருமாளே.
திருப்புகழ் 192 வசனமிக ஏற்றி (பழனி)
வசனமிக வேற்றி – மறவாதே
மனதுதுய ராற்றி – லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ – ரமதாலே
இகபரசெள பாக்ய – மருள்வாயே
பசுபதிசி வாக்ய – முணர்வோனே
பழநிமலை வீற்ற – ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி – மிகவாழ
அமரர்சிறை மீட்ட – பெருமாளே.
திருப்புகழ் 193 வஞ்சனை மிஞ்சி (பழனி)
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் – பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு – முரையாலே
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ – னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் – மெலிவேனோ
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு – முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் – மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய – மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் – பெருமாளே.
திருப்புகழ் 194 வரதா மணி நீ (பழனி)
வரதா மணிநீ – யெனவோரில்
வருகா தெதுதா – னதில்வாரா
திரதா திகளால் – நவலோக
மிடவே கரியா – மிதிலேது
சரதா மறையோ – தயன்மாலும்
சகலா கமநூ – லறியாத
பரதே வதையாள் – தருசேயே
பழனா புரிவாழ் – பெருமாளே.
திருப்புகழ் 195 வனிதை உடல் (பழனி)
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து – புவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று – வடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து – பொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற – னருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட – புலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த – வடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த – பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற – பெருமாளே.
திருப்புகழ் 196 வாதம் பித்தம் (பழனி)
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் – குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் – வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென – இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி – னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட – வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு – மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய – முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 197 வாரணந் தனை (பழனி)
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக – மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயித – ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன – நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் – தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் – விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு – முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி – லிடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் – பெருமாளே.
திருப்புகழ் 198 விதம் இசைந்து (பழனி)
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி – யழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி
விரக மொங்கிய மாமுலை யாலெதி – ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர
எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் – வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகை
அருள்பு ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலெனை யாள்வது – மொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய – அதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி – சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக – விறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி மீதினில் மேவிய – பெருமாளே.
திருப்புகழ் 199 விரை மருவு (பழனி)
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க – அதிமோக
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
விரகமயல் புரியு மின்ப – மடவார்பால்
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
இருளகல வுனது தண்டை – யணிபாதம்
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப – அருள்தாராய்
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகினொடு தழுவு கொண்டல் – மருகோனே
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட – வடிவேலா
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப – ருளமேவும்
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 200 வேய் இசைந்து (பழனி)
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய – அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட – வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய – மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட – அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் – மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் – திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி – யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் :