முத்துத் தெறிக்க (திருத்தணிகை) – திருப்புகழ் 294 

முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த – மலராலே

முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு – நிலவாலே

எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி – தளராதே

எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் – வரவேணும்

மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த – கதிர்வேலா

மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த – மணிமார்பா

மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த – கழலோனே

வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முலைபுளகம் எழ (திருத்தணிகை) – திருப்புகழ் 295 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *