இந்து மதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். எளியோருக்கு எளிமையாக காட்சி தரக்கூடிய விநாயகர் நாம் தெருவோரமும் சரி, கோயிலின் முகப்பிலும் சரி அவர் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத முழுமுதல் கடவுளாக இருக்கிறார்.
32 பெயர்கள் மற்றும் உருவத்தில் அருளும் கணபதியின் பெயர்கள் என்னென்ன என்றும், 32 வடிவங்களில் அருளும் விநாயகர் ஒவ்வொரு கணபதிக்கும் என்ன வித்தியசம், எப்படி இருப்பார் என்பதை இங்கு பார்ப்போம்..
- 32 வடிவங்களில் அருளும் விநாயகர்
- 1. பால கணபதி
- 2. தருண கணபதி
- 3. பக்தி கணபதி
- 4. வீர கணபதி
- 5. சக்தி கணபதி
- 6. துவிஜ கணபதி
- 7. சித்தி கணபதி
- 8. உச்சிஷ்ட கணபதி
- 9. விக்ன கணபதி
- 10. ஷிப்ர கணபதி
- 11. ஹேரம்ப கணபதி
- 12. லட்சுமி கணபதி
- 13. மகா கணபதி
- 14. விஜய கணபதி
- 15. நிருத்த கணபதி
- 16. ஊர்த்துவ கணபதி
- 17. ஏகாட்சர கணபதி
- 18. வர கணபதி
- 19. திரயாக்ஷர கணபதி
- 20. க்ஷிப்ரபிரசாத கணபதி
- 21. ஹரித்ரா கணபதி
- 22. ஏகதந்தி கணபதி
- 23. சிருஷ்டி கணபதி
- 24. உத்தண்ட கணபதி
- 25. ரணமோசன கணபதி
- 26. துண்டி கணபதி
- 27. துவிமுக கணபதி
- 28. மும்முக கணபதி
- 29. சிங்க கணபதி
- 30. யோக கணபதி
- 31. துர்க்கா கணபதி
- 32. சங்கட ஹர கணபதி
32 வடிவங்களில் அருளும் விநாயகர்
இந்த 32 கணபதிகளில் முதல் 16 கணபதி ஷோடச கணபதி வகைகள் என்றும், அடுத்த 16 கணபதி ஏக விம்சதி வகை என பிரிக்கப்பட்டுள்ளன.
1. பால கணபதி
குழந்தை போன்ற உருவத்தில், செங்கதிர் நிறத்தில் காட்சி தரக்கூடியவர். இவர் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பலம், கரும்பு ஆகியவற்ற தன் நான்கு திருக்கரங்களில் தாங்கியவர்.
2. தருண கணபதி
சிவந்த திருமேனியை கொண்ட தருண கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், கரும்புத் துண்டு, நெற்கதிர்கள், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரங்களில் ஏந்தியவர்.
3. பக்தி கணபதி
வெள்ளை நிறத்தில் காணப்படும் பக்தி கணபதி, தனது நான்கு திருக்கரங்களில் பாயாசக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்திருப்பார்.
4. வீர கணபதி
சிவந்த திருமேனியுடன் காணப்படும் வீர கணபதி, தன்னுடைய 16 திருக்கரங்களில் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை திருக்கரங்களிலும் ஏந்தியிருப்பார்.
5. சக்தி கணபதி
அந்தி வானம் போல சிவந்த மேனியுடன் இருக்கும் சக்தி கணபதி, தன் மடியில் பச்சை நிறத்திலான தேவியை, ஒரு கையால் இருப்பில் தேவியை அனைத்திருப்பது போலவும், மற்ற கைகளில் அபய ஹஸ்தம் , பாசம், பூமாலை ஆகியவற்றை தாங்கியவர்.
6. துவிஜ கணபதி
வெண்மையான திருமேனியை உடைய துவிஜ கணபதி, நான்கு முகங்கள், புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் ஆகியவற்றை தன் கரங்களில் தாங்கியவர்.
7. சித்தி கணபதி
பொன் மற்றும் பசுமை நிறம் கலந்த சித்தி விநாயகர், தன் 4 திருக்கரங்களில் பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றையும், தன் துதிக்கையில் மோதகத்தை தாங்கி இருப்பார்.
8. உச்சிஷ்ட கணபதி
நீல நிறத்தில் காட்சி அளிக்கும் உச்சிஷ்ட கணபதி, தன் 6 திருக்கரங்களில் இரண்டில் நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தாங்கி இருப்பார். அதோடு தான் காம மோகிதராக, பெண்ணின் மேனியில் தன் துதிக்கையை வைத்து காணப்படுவார்.
9. விக்ன கணபதி
தங்க நிறத்தை உடைய விக்ன கணபதி, தனது 10 திருக்கரங்களில் சக்கரம், சங்கு, கோடாரி, ஒடிந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்ப பாணம், பாசம், மாலை ஆகியவற்றுடன் காணப்படுகின்றார்.
10. ஷிப்ர கணபதி
செந்நிறத்தில் இருக்கும் ஷிப்ர கணபதி, தன் கைகளில் ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தி ரத்ன கும்பத்தை துதிக்கையில் கொண்டிருப்பார்.
11. ஹேரம்ப கணபதி
ஐந்து முகங்களை கொண்ட ஹேரம்ப கணபதி, தனது 10 கரங்களில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரையோடும், இதர கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.
12. லட்சுமி கணபதி
வெள்ளை நிறத்தில் இருக்கும் லட்சுமி கணபதி, நீல நிற தாமரைப் பூவை தனது கையில் ஏந்தி, இரு தேவிகளுடன் காணப்படுவார். தனது 8 திருக்கரங்களில் கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை கொண்டிருப்பார்.
13. மகா கணபதி
செந்நிற திருமேனியுடன் காணப்படும் மகா கணபதி, 10 கைகளையும், மூன்று கண்களையும், ட்தன் முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவி, இடது தொடையில் தேவியை அமரவைத்து, தனது கையால் அனைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாச, தந்தம், ரத்ன கலசம், நெற்கதி, நீலோத்பலம், மாதுளை ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.
இதையும் படிக்கலாம் : முக்கிய விநாயகர் திருத்தலங்களும் அதன் சிறப்புக்களும்..!
14. விஜய கணபதி
பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் 4 கரங்களில் ஏந்தியிருப்பார்.
15. நிருத்த கணபதி
பொன் நிற மேனியுடைய நிருத்த கணபதி, ஆறு திருக்கரங்களையும், அதில் மோதிரங்கள் அணிந்த கரங்களில், அங்குசம், பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இந்த கணபதியை கூத்தாடும் பிள்ளையார் எனவும் அழைப்பதுண்டு.
16. ஊர்த்துவ கணபதி
தங்கம் போல் ஜொலிக்கும் ஊர்த்துவ கணபதி, தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கி, பச்சை நிற மேனி தேவையை அணைத்தவாறு, தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.
17. ஏகாட்சர கணபதி
செந்நிறமாக இருக்கும் ஏகாட்ச கணபதி, செந்நிற உடை, செம்மலர் மாலையை அணிந்து, பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனை சூடியும் இருப்பார்.
18. வர கணபதி
சிவந்த திருமேனியை உடைய வர கணபதி, தனது நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியை தாங்கி இருப்பார். பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு.
19. திரயாக்ஷர கணபதி
பொன்னிற மேனியில் இருக்கும் திரயாக்ஷர கணபதி பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
பெரிய வயிற்றினை கொண்ட க்ஷிப்ரபிரசாத கணபதி ஆபரணங்களை சூடி, ஆறு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.
21. ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை 4 திருக்கரங்களில் ஏந்தி இருப்பார்.
22. ஏகதந்தி கணபதி
நீல நிற மேனியான ஏகாந்த கணபதி பெரிய வயிறு கொண்டிருப்பார். கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தி காணப்படுகிறார்.
23. சிருஷ்டி கணபதி
சிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கண்பதி தன் 4 கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றை ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கிறார்.
24. உத்தண்ட கணபதி
தனது பத்து திருக்கரங்களில் பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை வைத்திருப்பார். இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவர்.
25. ரணமோசன கணபதி
வெண்பளிங்கு மேனியுடன் இருக்கும் ரணமோசன கணபதி செந்நிறப் பட்டாடை உடுத்தி இருப்பார். தன் கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கி காணப்படுகிறார்.
26. துண்டி கணபதி
நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
27. துவிமுக கணபதி
இரண்டு முகங்களை கொண்ட துவிமுக கணபதி பசுமையான நீல நிற கொண்டவர். செம்பட்டாடை உடுத்தி, தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.
28. மும்முக கணபதி
மூன்று முகத்துடன் பொற்றாமரை ஆசனத்தில் காணப்படுபவர். சிவந்த மேனியை உடைய இவர், பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கி காட்சி தருகிறார்.
29. சிங்க கணபதி
சிங்க வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சிங்க கணபதி வெண்மையான நிறத்தில் இருப்பதோடு தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும், ஆறு திருக்கரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர்.
30. யோக கணபதி
செஞ்சூரியன் நிறத்தில், நீல நிற ஆடையை தரித்த இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளை ஏந்தி, யோக நிலையில் தோற்றமளிக்கிறார்.
31. துர்க்கா கணபதி
பசும் பொன் நிறத்தில் இருக்கும் துர்கா கணபதி, தன் 8 திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.
32. சங்கட ஹர கணபதி
இளஞ்சூரியன் நிறத்தில், தன் இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியை வைத்திருப்பார். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி அருள் பாலிப்பவர்.
இதையும் படிக்கலாம் : விநாயகருக்கு உகந்த அருகம்புல் வழிபாடு..!
கபிலதேவநாயனார் என்பவர் கணபதி குறித்து,
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.
விநாயகனே வேட்கை தணிவிப்பான்.
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து” என பாடியுள்ளார்..