தமிழ் புத்தாண்டு வரலாறு

tamil new year history

தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுமே தனி சிறப்புடையது, அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது.

வரலாறு

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற வார்த்தைக்கு ஏற்ப தமிழ் மக்கள் எல்லோரும் சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறார்கள். காலநிலை மற்றும் பருவநிலை மாறுதல்களால் புதுவருடம் பிறப்பதை தான் புத்தாண்டு என கொண்டாடுகிறோம்.

பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.

சூரிய மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

சான்றுகள்

தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதற்கான போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. கடந்த காலத்தில் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும்.

மலைபடுகடாம் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

பாரம்பரியம்

தமிழர் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வது அலங்கார படுத்துவது. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டு கொண்டாடும் நாடுகள்

சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.

போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *