தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம் கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை போற்றுகின்றனர் பெண்கள்.
ஆணின்றி பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணும் இல்லை. இவர்கள் இருவருமே இணைந்ததுதான் குடும்பம். இதை நமக்கெல்லாம் உணர்த்துவதுபோல் அமைந்த இறைவனின் திருவுருவம்தான் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம். இந்த அற்புதமான அர்த்தநாரீஸ்வர வடிவத்தையே உருவாக்கித் தந்தது கேதார கௌரி விரதம். சிவனுக்கான விரதங்களில் முக்கியமானது என்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விரதம் தீபாவளிக்கு அடுத்த நாள் வருகிறது.
புராண கதை
பிருங்கி முனிவர் மிகுந்த சிவபக்தர். சதாசர்வ காலமும் சிவலிங்க பூஜை செய்து வருவதில் அலாதி ஆனந்தம் அவருக்கு! தன் கணவரை இப்படி நெக்குருகி பூஜித்து வருகிறார்களே என்று ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், ‘சக்தியாகிய நம்மை வழிபடவில்லையே முனிவர்’ என வருந்தினாள் பார்வதிதேவி.
சிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பினார். பூவுலகுக்கு வந்தாள். கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கௌதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கௌதம மகரிஷி.
சக்திதேவியும், கர்ம சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்தாள். நித்திய அனுஷ்டானமாக அந்த பூஜையைச் செய்தாள். பூஜையிலேயே லயித்தாள். இதில் மகிழ்ந்த சிவபெருமான், பூவுலகுக்கு வந்து அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார். அத்துடன், தன் திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.
உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம் தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது. இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒரு நாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்த நாளில் தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள்.
கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்
கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்! ஆலமரத்தடியிலும் பூஜை செய்து பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.
21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது நோன்புச்சரடு. சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள். வயது முதிர்ந்த சுமங்கலிகள், மற்ற பெண்களுக்கு, சுமங்கலிகளுக்கு நோன்புச்சரடைக் கட்டிவிடுவார்கள்.
கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும். மாங்கல்யம் காத்தருளும் கேதார கெளரி நோன்பு இருந்து சிவ சக்தியை வழிபடுவோம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. எனவே தீபத்திருநாளில் இவ்வரிய நோன்பினை நோர்ப்பவர்களுக்கு திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. எனவே தீபத்திருநாளில் இவ்வரிய நோன்பினை நோர்ப்பவர்களுக்கு திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாம் : வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?