ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவையாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.
ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை,
- உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை,
- கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை,
- தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.
தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர்.
சூரியனின் பயணம்
ஆன்மிகத்தில் ஒரு ஆண்டினை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். ஆடி முதல் மார்கழி வரை இருக்கும் 6 மாதங்கள் தட்சிணாயனம் என்றும், தை மாதம் முதல் ஆனி வரை இருக்கும் 6 மாதங்கள் உத்தராயனம் எனவும் பிரிக்கப்படுகிறது. உத்தர – அயனம் என்றால் வடக்குப்புற வழி என்று பொருள்.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்று சொன்னாலும், தட்சிணாயன காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தராயன காலத்தில் சற்று வடக்குப்புறமாகவும் சூரியனின் பயணம் இருக்கும்.
மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் பாரதப்போர் நிகழ்ந்தபோது அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.
உத்தராயன புண்ணிய காலம் தை மாதம் தொடங்குகிறது என்றால், இம்மாதத்தில் வரும் கிருத்திகை – வாழ்வு செழிக்க, எத்தனை பாக்கியம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும் . அதனால் தான், இக்காலம் துவங்குகிற தை மாதத்தைப் போற்றும் வகையில் முன்னோர்களால் சொல்லப்பட்ட வாசகம்.. தை பிறந்தால் வழி பிறக்கும் – என்பதாகும்.
“தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!” என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் கூறுவர்.
தை கிருத்திகை சிறப்பு
தை மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே “ரத சப்தமி’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே “தை கிருத்திகை’ ஆகும்.
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது “தை” மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும் எனவே தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது.
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்.
தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.
தை கிருத்திகை வழிபாடு
கிருத்திகை விரதத்திற்கு முதல் நாளான பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று விடியற்காலை பொழுதில் நீராடி, கந்த புராணம் மற்றும் முருகன் துதிகளை பாராயணம் செய்தல் வேண்டும்.
கிருத்திகை அன்று முழுதும் உண்ணாமல், உறங்காமல் நோன்பிருந்து, அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் மனமார முருகப் பெருமானை நினைந்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் இன்று நாம் இயந்திரத்தனமாய் சுழன்றுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், அந்த அளவிற்கு விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கிருத்திகை தினத்திலாவது விரதமிருப்பது முருகப் பெருமானின் அருளைப் பெற உதவும்.
இதையும் படிக்கலாம் : பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்..!