அசிடிட்டியை போக்கும் இயற்கை மூலிகைகள்..!

acidity home remedies

நமக்கு சில சமயங்களில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, அசௌகரியமான நிலை தந்திருக்கிறதா? எல்லாருக்குமே அப்படி ஏற்பட்டிருக்கும். வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது அவை உணவுக்குழாய் வரை மேலே வருகிறது. அதனால்தான் அங்கே எரிச்சல் உண்டாகும்.

இது இன்னும் தீவிரமானால் வயிற்று வலி, குமட்டல் வாந்தி, வயிற்று உப்புசம் உண்டாகும். மசாலா உணவுகள் அதிகம் உண்டால், சரியாக காலை உணவை எடுத்துக் கொள்ளாமலிருக்கும்போது, முக்கியமாய் மது அருந்தினால் என அசிடிட்டி வர பல காரனங்கள் உண்டு. அடிக்கடி வந்தால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிடும். அதனால் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டும்.

நிறைய பேர் விளம்பரங்களைப் பார்த்து கடைகளில் கிடைக்கும், ஜீரண மருந்துக்களை வாங்குவார்கள். அவற்றில் அலுமினியம் ஹைட்ராக்ஸைட் அதிகம் இருப்பதால் பக்க விளைவுகளை தரும்.

எனவே இது போன்ற சரிப்படுத்தக் கூடிய பாதிப்பிற்கு மருத்துவரை ஆலோசனையின்றி மாத்திரை மருந்துகளை தேடிப் போகாதீர்கள். அதற்கு பதிலாக உடலுக்கு பக்க விளைவுகளைத் தராத இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

துளசி

அசிடிட்டி வந்தால் உடனே வாய்வுத் தொல்லையும் ஏற்படும். வாய்வுத் தொல்லையாலும் அசிட்டிட்டி உண்டாகும். இந்த இரண்டிற்குமே துளசி அருமருந்தாகும். துளசி இலையை பறித்து நன்றாக மென்று அதன் சாறினை விழுங்குங்கள் அல்லது துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடியுங்கள். இதனால் அமிலம் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.

சோம்பு

சோம்பு எந்த வகை உணவையும் எளிதில் ஜீரணப்படுத்திவிடும். நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தி, நிவாரணம் அளிக்கும். சோம்பினை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும். வெறும் வாயிலும் மெல்லலாம்.

பட்டை

நெஞ்செரிச்சலை போக்கும் அற்புத மருந்தாகும். பட்டை ஜீரண சக்தியை தூண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. பட்டைப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தேநீரில் பட்டையை கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் அசிடிட்டி குறையும்.

மோர்

மோர் மிகவும் குளிர்ச்சியானது. அதிக அமிலம் சுரப்பதை உடனடியாக கட்டுப்படுத்தும். வயிற்றிற்கு இதம் தரும். குளிர்ந்த மோரில் இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்து குடியுங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.

கிராம்பு

கிராம்பு கிருமி நாசினி மட்டுமல்ல. அதிலுள்ள குணங்கள் ஜீரண சக்தியை தூண்டும். வாயுவை போக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும். கிராம்பை பொடி செய்து நீரில் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.

இதையும் படிக்கலாம் : குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *