பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
கண்புரையைத் தெரிந்து வைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர் அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை.
இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின் தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கண் நீர் அழுத்த நோய் என்பது எது?
கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (Iris) கார்னியாவும் (Cornea) இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்’ (Aqueous Humor) என்று பெயர்.
கண்ணின் வெளிப்பக்கத்தில் வட்ட வடிவில் இருக்கிற கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான உணவுச் சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உண்டாகின்ற கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். அதாவது, முன்கண் திரவமும் கண்ணீரும் ஒன்றல்ல. கண்ணின் வெளிப்பக்கமாகக் கண்ணீர் சுரக்கிறது என்றால், இது கண்ணின் உட்பக்கமாகச் சுரக்கிறது. இது விழிவெண்படலமும் (Conjunctiva) கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இதன் வடிதலில் தடை உண்டானாலோ, அதிகத் திரவம் சுரந்தாலோ, திரவத்தின் அளவு அதிகமாகி, கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் பயணிக்கும் ரத்தத்துக்கு ஒருவித அழுத்தம் உள்ளதைப் போல, கண்ணில் பயணிக்கும் இந்தத் திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. அதுதான் கண்ணின் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திரவம் சுரக்கிற அளவும் வெளியேறுகிற அளவும் சமமாக இருந்தால், கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும்.
நமக்குச் சரியான கண் நீர் அழுத்தம் 10 முதல் 20 மி.மீ. பாதரச அளவாகும். விழிக்கோளத்தின் கனஅளவுகள் மாறாமல் இருப்பதற்கு, இந்த அழுத்தம் தேவைப்படுகிறது.
அதே வேளையில் இந்த அழுத்தம் அதிகமானால், அது கண் முழுவதும் பரவும்; குறிப்பாக, விழித்திரைக்குப் பின்புறம் இருக்கிற பார்வை நரம்பைப் பாதிக்கும்.
பார்வை பற்றிய தகவல் மூளைக்குச் செல்லாது; அதனால் பார்வை பறிபோகும். இதுதான் இந்த நோயின் அபாயகரமான தாக்குதல்.
வகைகள்
- விரிகோணக் கண் நீர்அழுத்தம் (Open angle glaucoma)
- குறுங்கோணக் கண் நீர்அழுத்தம் (Closed angle glaucoma)
- பிறவி கண் நீர்அழுத்தம் (Congenital glaucoma)
விரிகோணக் கண் நீர்அழுத்தம்
- இந்த மூன்றில் முதல்வகைதான் முக்கியமானது. இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி.
- இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும் போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
- இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது. இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும்.
- எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் ‘பவரை’ மாற்றுவார்கள்.
- தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும். இரவில் பார்வை மங்கலாக இருக்கும்.
- இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது.
- நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும்.
- கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும்.
குறுங்கோணக் கண் நீர்அழுத்தம்
- கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண் வலியும், தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும்.
- வாந்தி வரும்.
- கண்கள் சிவந்துபோகும்.
- கண்களில் நீர் வழியும்.
- பார்வை மங்கும்.
- கண்கள் கூசும்.
- விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும்.
பிறவி கண் நீர்அழுத்தம்
- பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது.
- குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும்.
- கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும்.
- வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும்.
- பார்வை குறைந்திருக்கும்.
யாருக்கு வரும்?
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். பிறவியிலேயேகூட வரலாம். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
நீரிழிவுநோய்
உயர் ரத்த அழுத்தம் இருப்பர்களுக்கும், அடிக்கடிஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்து வோருக்கும் இது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் பரம்பரை ரீதியாக வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது வரலாம்.
அதிக மைனஸ் பவர் கண்ணாடி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, இது வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
கண்ணில் அடிபட்டு, முன் கண் திரவம் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் இது வரலாம்.
என்ன பரிசோதனை?
‘விழி அழுத்தமானி’ (Tonometer) எனும் கருவி மூலம் கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
‘விழி அகநோக்கி’ (Ophthalmoscope) பயன்படுத்திப் பார்வை நரம்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்த்துவிடலாம்.
‘விழிக்கோணமானி’ (Gonioscope) உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறுவதில் எங்குத் தடை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பார்வை பரப்பளவை அளக்க உதவும் கணினி இணைக்கப்பட்ட ‘பெரிமீட்டர்’ (Perimeter) கருவிப் பரிசோதனையால் பக்கப் பார்வை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அளந்துகொள்ள முடியும்.
என்ன சிகிச்சை?
இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்று வித சிகிச்சைகள் இருக்கின்றன.
நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து சிகிச்சை பலன் தரும். ஆனால், ஆயுள் முழுவதும் இவர்கள் கண் சொட்டு மருந்துகளைப் போட வேண்டியிருக்கும்.
மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி தொடர்ந்து முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மருந்து சிகிச்சையோடு லேசர் சிகிச்சையும் தரப்படும். கருவிழியில் மிகச் சிறிய துளை போட்டு முன்கண் திரவத்தை வெளியேற்றிக் கண்ணின் அழுத்தத்தைக் குறைப்பது லேசர் சிகிச்சையின் (Laser iridotomy) முக்கிய நோக்கம். இந்த நோய்க்குத் தற்போதுள்ள நவீன சிகிச்சை இதுதான்.
கண் நீர்அழுத்த நோயை இந்த இரண்டு சிகிச்சைகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கண்ணில் திரவ அடைப்பைத் திறக்க ‘டிரபிகுலெக்டமி’ (Trabeculectomy) எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இந்தச் சிகிச்சையின் போது முன்கண் திரவம் வெளியேறுகிற பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் கண் நீர்அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையால் இனிமேல் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும்; அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏற்கெனவே இழந்துவிட்ட பார்வையை மீட்டுத்தர முடியாது.
அந்தப் பார்வை இழப்பு நிரந்தரமானது. ஆகையால், கண் நீர்அழுத்த நோயைப் பொறுத்தவரை நோய்த்தடுப்பு ஒன்றே பார்வை இழப்பைத் தவிர்க்க ஒரே வழி.
தடுக்க என்ன வழி?
கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’ என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும்.
பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
இதையும் படிக்கலாம் : நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்..!