அருள்மிகு ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம்

சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலைமீது அமைந்துள்ளது. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

ஐயப்பன்

sabarimalai
ஐயப்பன்

தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். புலியை வாகனமாகக் கொண்டவன். சக்தியின் ஸ்வரூபான சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சரிய விரதத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கு விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். ஹரியும், விஷ்ணுவும் குழந்தை ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் தேஜசுடன் ஜொலிக்கும் குழந்தை ஐயப்பனைக் கண்டான். அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.

இவ்வாறிருக்க மகாராணி கருவுற்று, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர். ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர்.

சிலரின் தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை, புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனை தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. ஐயப்பனின் அவதார மகிமை பூர்த்தி பெற்றது.

இந்திரனே புலியாக மாற புலிமேல் ஏறி நாடு சென்றான், ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனை கண்டு அரசி, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ஐயப்பனும் மன்னித்து அருளினார்.

தனது பிறப்பு எதற்காக நிகழ்ந்ததுவோ அது நிறைவேறிவிட்டது என்றும் அதனால் தான் தேவலோகம் செல்லப் போவதாகவும் கூறினான். மன்னன் தன்னிடம் மிகுந்த அன்பும் பாசமும் காட்டி வளர்த்ததாகவும், அதனால் அவருக்கு என்னவரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றான். மன்னன் ராஜசேகரன், மணிகண்டனுக்கு ஒரு கோயில் கட்ட விரும்புவதாகவும், அதை எங்கே கட்டலாம் என்றும் கேட்டார். மணிகண்டன், கையிலிருந்த அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது சபரி என்னும் மலைப்பகுதியில் சென்று விழுந்தது. ஸ்ரீராமன் யுகத்தில் சபரி என்ற பெயர்கொண்ட ஒரு சன்யாசினி தவம் செய்த இடம்தான் அது. அங்கே கோயில் கட்டலாம் என்று சொல்லிவிட்டு மாயமாக மறைந்தான் மணிகண்டன்.

மன்னன் ராஜசேகரன் அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சபரிமலையில் கோயில் எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டினான். குடும்ப உறவுகளிலிருந்து விடுபட்டு, உலகியல் இன்பங்களை மறந்து 41 நாட்கள் விரதம் இருந்து உண்மையான பக்தியுடன் வருகின்றவர்களுக்கு மட்டுமே தாம் தரிசனம் அளிப்பதாக மணிகண்டன் சொல்லியிருந்தான்.

தாம் ஒரு பிரம்மச்சாரி, தம்மை தரிசிக்க வருகின்ற எல்லோருமே ஐயப்ப சுவாமிகள்தான் என்பதையும் சொல்லியிருந்தார். புலிப்பாலுக்காகக் காடு சென்றபோது தேங்காயை உணவாக எடுத்துச் சென்றதன் நினைவாகவே பக்தர்கள் அவற்றை இருமுடிக்கெட்டு தலையில் சுமந்து செல்கின்றனர். பம்பையில் நீராடி சரணமந்திரங்கள் உச்சரித்து கொண்டு புனித 18 படிகளையும் ஏறவேண்டும்.

மன்னன் ராஜசேகரன் குறித்த காலத்தில் கோயிலைக் கட்டி, பதினெட்டு படிகளையும் அமைத்தார். சபரிமலை காசியைப் போலவும், பம்பையாறு கங்கையைப் போலவும் புனிதமானவை என மணிகண்டன் கூறியதை மன்னன் நினைத்துக்கொண்டான்.

கோயிலுக்குள் ஸ்ரீதர்மசாஸ்தாவை எவ்வாறு பிரதிஷ்டை செய்வது என்பது குறித்து சிந்தித்தான். அந்நேரம் தர்மசாஸ்தா பரசுராமனை அங்கே அனுப்பிவைத்தார். கடலுக்கடியில் இருந்த இடத்தை மழு எறிந்து கேரளம் என்னும் நிலமாக மாற்றியவர்தான் பரசுராமன். சபரிமலை வந்த பரசுராமன் தாமே உருவமைத்த தர்மசாஸ்தா உருவத்தை மகரசங்கிராந்தி நாளன்று (தைமாதம் முதல்நாள்) கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ரீதர்மசாஸ்தா என்னும் ஐயப்பனின் அருள் வேண்டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 41 நாட்கள் விரதம் இருந்து, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும், சரண மந்திரம் சொல்லிக்கொண்டே, பம்பையில் நீராடி, இருமுடிக்கெட்டு தாங்கி, புனித 18 படிகளையும் தாண்டி ஐயப்ப தரிசனம் செய்வது மிகப்பெரிய புண்ணியச் செயலாகும்.

சபரிமலை உபதேவதைகள்

நாகராஜா

கோயில் சன்னிதானத்துக்கு மிக அருகிலாக நாகராஜா கோயில் உள்ளது. சுவாமி ஐயப்பனையும் கன்னிமூலை கணபதியையும் வணங்கிய பின் பக்தர்கள் நாகராஜாவை வணங்கிப் பூஜைப் பொருட்களை அர்ப்பணிக்கின்றனர்.

வாவர் நடை

கோயில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் (ஐயப்பசுவாமியின் மிக நெருங்கிய நண்பர்)  என்பவருக்கான ஓர் இருப்பிடம் உள்ளது. “வாவர் நடை” என அறியப்படும் இவ்விடம் மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மாளிகைப்புறத்து அம்மை

மாளிகைப்புறத்து அம்மையைக் குறித்து இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. ஐயப்பனுடன் போர் செய்தவள் மஹிஷி என்னும் துர்தேவதை. அவள் தோற்று வீழ்ந்தபின் அவளது உடம்பிலிருந்து அழகான ஒரு பெண் தோன்றினாள். அவள் அய்யப்பனுடன் இருக்க ஆசைப்பட்டாள். அவள்தான் அந்த அம்மை என்பது ஒரு நம்பிக்கை.

ஐயப்பனின் குருவின் மகள் சன்னியாசியாகி ஐயப்பனுடன் இருக்க ஆசைப்பட்டாள். அவளே மாளிகைப்புறத்து அம்மை என்பது இரண்டாவது நம்பிக்கை.

தாந்திரிக முறைப்படி பக்தர்கள் மாளிகைப்புறத்து அம்மையை ஆதிபராசக்தியாக வழிபடவேண்டும்.  மாளிகைப்புறத்து அம்மைக்கான வழிபாட்டுப் பொருள்கள் மஞ்சள், குங்குமம், சர்க்கரை, தேன், கதளிப்பழம், சிவப்புப் பட்டு ஆகியனவாகும்.

கறுப்புசுவாமி, கறுப்பை அம்மை

சபரிமலை படினெட்டாம் படியின் வலது பக்கமாக கறுப்புசுவாமி கோயில் உள்ளது. கறுப்பை அம்மையும் அங்கு குடிகொண்டுள்ளாள். காட்டுவாசிகளாக இருந்த அவர்கள் ஐயப்பனின் புனிதப் பயணத்தின்போது மிகவும் உதவியதாகவும், அவர்கள் திவ்விய சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

வலிய கடுத்த சுவாமி

பதினெட்டாம் படியின் இடதுபுறமாக வலிய கடுத்த சுவாமி கோயில் உள்ளது. அவர் ஐயப்பனின் உதவியாளராக இருந்தவர்.

மேல் கணபதி

சன்னிதானத்தில் ஸ்ரீகோயிலின் பக்கத்தில் மேல் கணபதி பிரதிஷ்டை உள்ளது. கணபதிக்கு வழிபாடாக உடைக்கப்பட்ட நெய்த்தேங்காய் தீ ஆழியில் இடப்படுகின்றது. கணபதி ஹோமம் முக்கிய வழிபாடாகும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜை நேரங்கள்

பூஜை நேரம்
காலை நேரப் பூஜை
ஸ்ரீகோயில் நடை திறப்பு

நிர்மால்யம்

அபிஷேகம்

3.00 AM

 

கணபதி ஹோமம் 3.30 AM
நெய்யபிஷேகம் 3.30 AM To 7.00 AM
உஷ பூஜை 7.30 AM
நெய்யபிஷேகம் 8.30 AM To 11.00 AM
நெய்யபிஷேகம்/

நெய்த்தோணியில் விடப்பட்ட நெய்யால்

11.10 AM
அஷ்டாபிஷேகம் (15 முறை) 11.00 AM To 11.30 AM
உச்சிக்கால பூஜை 12.30 PM
ஸ்ரீகோயில் நடை அடைப்பு 1.00 PM
மாலை நேரப் பூஜை
ஸ்ரீகோயில் நடை திறப்பு 3.00 PM
தீபாராதனை 6.30 PM
புஷ்பாபிஷேகம் 7.00 PM To 9.30 PM
அத்தாழ பூஜை 9.30 PM
ஹரிவராசனம்/

ஸ்ரீகோயில் நடை அடைப்பு

11.00 PM

மாலையிடல்

ஒரு பக்தன் எப்பொழுது மாலை இடுகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது. மலைப்பயணம் செய்து சுவாமியை தரிசிக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்துவதற்காகவே மாலை அணியப்படுகிறது.

புகை பிடித்தல், மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களைக் கட்டாயமாக விட்டுவிடவேண்டும். பக்தர்கள் இல்லற இன்பங்களிலிருந்தும் விடுபட்டிருக்கவேண்டும்.

பூஜைகள் செய்தபின் ஏதேனும் கோயில் பூஜாரியோ குருசுவாமியோ பக்தனுக்கு மாலை அணிவிப்பார். பதினெட்டு முறை புனித மலைப்பயணம் செய்து சுவாமி ஐயப்பனை தரிசித்தவர்கள் குருசுவாமி எனறியப்படுவர்.

பக்தர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்தும் மாலை அணியலாம். மலைப்பயணம் செய்து திரும்பி வந்தபின் மாலையைக் கழற்றலாம்.

மண்டல விரதம்

ஒரு மண்டலம் என்பது 41 நாட்கள். இந்நாட்களில் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதமே மண்டல விரதம். மண்டல விரதக் காலத்தில் பக்தர்கள் எளிய வாழ்க்கை வாழ்வர். மாலை அணித்ததிலிருந்து விரதம் தொடங்கும். சனிக்கிழமை அல்லது சுவாமி ஐயப்பனின் பிறந்த நட்சத்திரமான உத்திர நன்னாளில் மாலை அணிவது வழக்கம்.

வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவும், உற்சாகத்தை ஏற்படுத்தவும், ஆரோக்கிய வாழ்வு வாழவுமே மண்டல விரதம் இறுக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே சுயக் கட்டுப்பாடு.

விரத நாட்களில் கறுப்பு ஆடை அணிவது வழக்கம். விரத நாட்களில் முடி வெட்டுவது, க்ஷவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இருமுடிக் கெட்டு

irumudi kattu
இருமுடிக் கெட்டு

சபரிமலை புனிதப் பயனத்தின் வழிபாட்டிற்கும் தேவையான பொருட்களை துணிப்பைக்குள் நிறைப்பதே கெட்டு நிறைத்தல் இதனை “இருமுடிக் கெட்டு” என்பர்.

இரண்டு பகுதிகளுள்ள இருமுடிக்கெட்டின் முன் பகுதியில் நெய்த்தேங்காவும், ஐயப்பனுக்கும் பிற தேவர்களுக்குமான வழிபாட்டுப் பொருட்களும் நிறைக்கப்படுகின்றன. பின்னர் நூலால் பத்திரமாகக் கட்டிவைப்பர். இருமுடிக்கெட்டின் இப்பகுதி ஆன்மீக சக்தி வாய்ந்ததாகும். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே உடைக்கவேண்டிய தேங்காய்கள் கட்டின் அடுத்த பகுதியில் நிறைக்கப்படுகின்றன. வழிபாட்டிற்கும் தேவையான பொருட்களை துணிப்பைக்குள் நிறைப்பதே இருமுடிக் கெட்டு என்பர்.

குருசுவாமியின் முன்னிலையில் கெட்டுநிறைத்தல் நடைபெறும். தலையில் இருமுடிக்கெட்டுடன் செல்கின்ற பக்தர்கள் மட்டுமே புனிதமான 18 படிகள் ஏறி சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருமுடிக்கெட்டு இல்லாதவர்கள் வேறு வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிக்கலம்.

நெய்த்தேங்காய்

ஆரம்ப பூஜைகளுக்குப் பின் தேங்காயில் பசு நெய் நிறைக்கப்படும். முன்னதாக சகிரி நீக்கி தேங்காய் சுத்தமாக்கி, தேங்காய் நீரை ஒரு சிறு துளை வழியாக எடுக்க வேண்டும்.  இவ்வாறாக ஐயப்பனுக்காக நெய் நிறைக்கப்படும் தேங்காய் “நெய்த்தேங்காய்” என அறியப்படுகின்றது.

பரம்பரை வழி

சபரிமலையைச் சென்றடைய பல வழிகள் உள்ளன. அவற்றுள் எருமேலி வழி, வண்டிப்பெரியார் வழி, சாலக்கயம் வழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

எருமேலி வழியாகச் செல்லும் பாதை பரம்பரை வழியாகக் கருதப்படுகின்றது. ஐயப்பன் மஹிஷையைக் கொல்வதற்கு இப்பாதை வழியாகத்தான் சென்றார் எனக் கூறப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் மிகக் கடினமானபாதையும் இதுதான். இந்தப் பாதை வழியாகச் செல்கின்றவர்கள், சுமார் 61 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதைகளில் நடந்தும் மலை ஏறியும் பயணம் செய்யவேண்டும். இவ்வழியாகச் செல்கின்றவர்கள் ஆங்காங்கே சில குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிச் செல்வர். இப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், எருமேலியிலுள்ள ஸ்ரீதர்ம சாஸ்தாவையும் வாவர் சுவாமியையும் வணங்கிவிட்டுப் பயணத்தை ஆரம்பிப்பர்.

எருமேலியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது “பேரூர் தோடு”. ஐயப்பன் தன் பயணத்தின்போது இங்குதான் ஓய்வெடுத்ததாகக் சொல்லப்படுகிறது. சபரிமலை ஏறுவது இங்கிருந்துதான் என்பதாலும் இவ்விடம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த இடத்தை அடைந்ததும் பக்தர்கள் ஐயப்பனிடம் அடைக்கலம் கேட்டு சரணமந்திரங்கள் சொல்லுவதை கேட்கலாம். பேரூர் தோட்டிற்குப் பின்னால் அமைந்த காட்டுப்பகுதி “பூங்காவனம்” என்று அறியப்படுகின்றது.

எருமேலிப் பாதையின் அடுத்த முக்கிய இடம் “காளகெட்டி”. இது பேரூர் தோட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஐயப்பன் மஹிஷியைக் கொல்லும் காட்சியை நேரடியாகக் காண சிவபெருமான் வந்தார் என்றும், அவர் தன்னுடைய வாகனமாகிய காளையை இங்குத்தான் கட்டியிட்டார் என்றும் நம்பப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள கோயிலில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவர்.

காள்கெட்டியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் “அழுதை” என்னும் ஆறு ஓடுகிறது. இது பம்பையின் ஒரு கிளை நதி. பக்தர்கள் அழுதை ஆற்றிலிருந்து சிறு கற்களைப் பொறுக்கி வைத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர்கள் செங்குத்தான அழுதைக் குன்றில் ஏறுகின்றனர். சுமார் 2 கிலோமீட்டர் உயரம் கொண்ட இக் குன்றில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அழுதைக் குன்றின் மேற்பகுதி “கல்லிடும்குன்று” என அறியப்படுகின்றது. இங்கு பக்தர்கள் அழுதையாற்றிலிருந்து எடுத்துவந்த கற்களை கீழ்நோக்கி எறிகின்றனர். கொல்லப்பட்ட மஹிஷியின் உடற்பகுதிகளைக் கீழ்நோக்கி எறிவதன் அறிகுறியாகக் கல்லெறியும் சடங்கு நடத்தப்படுகிறது.

18 படிகளுக்கான தத்துவங்கள்

ayyappan
18 படி
  • 1 முதல்‌ 5 படிகள்‌ மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்‌;
  • 6 முதல்‌ 13 படிகள் வரை அஷ்டமா சித்திகளையும்‌;
  • 14, 15, 16 படிகள்‌ மூன்று வித குணங்களையும்‌;
  • 17-ஆவது படி ஞானத்தையும்;
  • 18-ஆவது படி அஞ்ஞானத்தையும்‌ குறிக்கின்றது;

அற்புதம் நிறைந்த கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்வது தான் விசேஷம். கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். மற்ற மாதங்களிலும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.

18 படிகளும் ஐயப்பன் திருநாமங்களும்

1 – ஆம்‌ படி – குளத்தூர்‌ பாலன்‌

2 – ஆம்‌ படி – ஆரியங்காவு அனந்த ரூபன்‌

3 – ஆம்‌ படி – எரிமேலி ஏழைப்‌ பங்காளன்‌

4 – ஆம்‌ படி – ஐந்துமலைத்‌ தேவன்‌

5 – ஆம்‌ படி – ஐங்கரன்‌ சோதரன்‌

6 – ஆம்‌ படி – கலியுக வரதன்‌

7 – ஆம்‌ படி – கருணாகரத்‌ தேவன்‌

8 – ஆம்‌ படி – சத்யப்பரிபாலகன்‌

9 – ஆம்‌ படி – சற்குண சீலன்‌

10 – ஆம்‌ படி – சபரிமலை வாசன்‌

11 – ஆம்‌ படி – வீரமணி கண்டன்‌

12 – ஆம்‌ படி – விண்ணவர்‌ தேவன்‌

13 – ஆம்‌ படி – மோகினி பாலன்‌

14 – ஆம்‌ படி – சாந்த சுவரூபன்‌

15 – ஆம்‌ படி – சற்குண நாதன்‌

16 – ஆம்‌ படி – நற்குணக்‌ கொழுந்தன்‌

17 – ஆம்‌ படி – உள்ளத்தமர்வோன்‌

18 – ஆம்‌ படி – ஸ்ரீ ஐயப்பன்‌

சபரிமலைக்கு எப்படி செல்வது

ரோடு

கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர், பழனி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து பம்பைக்குத் தொடர் பேருந்துகள் விட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, கர்நாடகப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பம்பைவரை பேருந்துகள் இயக்கக் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

இரயில்

இரயில் வழியாகக் கோட்டயம் அல்லது செங்கன்னூர் வரை சென்று அங்கிருந்து ரோடு வழியாக பம்பைக்கு செல்லலாம்.

விமானம்

விமானம் மூலம் திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமானத்தாவளத்தில் இறங்கி, ரயிலில் கோட்டயம் வரை அல்லது ரோடு வழியாக பம்பைக்கு போகலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்பு

ayyappan
ஐயப்பன்
  • கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்.
  • சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல்) அருள்பாலிப்பது இத்தல ஐயப்பனின் விசேஷமாகும்.
  • ஐயப்பன், மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.
  • ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு “அஷ்டாபிஷேகம்” என்று பெயர்.
  • சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்தப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.
  • ஐயப்ப பாடல்களில் முக்கியமானது, “ஹரிவராசனம்”. இது இரவில் ஐயப்பனை உறங்கச் செய்வதற்காக இசைக்கப்படும் தாலாட்டு.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். வருடம் முழுவது இக்கோயில் திறந்திருப்பதில்லை.

மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *