தைப்பூசம் 2024 முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி?

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புவாய்ந்த நாளாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தை மாதம் தமிழ் மக்களுக்கு புனிதமான மாதம். இந்த தை மாதத்தில் தான் பூச நட்சத்திரமும் முழு பௌர்ணமியும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. அந்த நாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த பிரபஞ்சம் தைப்பூச நாளில் உருவானது என்று ஒரு புராணக்கதை உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாள். இந்த நாள் சிவபெருமானுக்கும், குரு பகவானுக்கும் சிறப்பு வாய்ந்தது. தைப்பூச நாளில் ஒருவர் விரதம் இருந்தால், முருகன் விரும்பிய வரங்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.

தைப்பூசம் 2024 எப்போது?

இந்த ஆண்டு தைப்பூசம் ஜனவரி 25, 2024 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூசம் குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருகிறது. எனவே, இந்த தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

தைப்பூச வழிபாட்டிற்கு உகந்த நேரம் எது?

தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 2024 ஜனவரி 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. எனவே தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, 24-ம் தேதி இரவு 10.44 மணி முதல் 25-ம் தேதி இரவு 11.56 மணி வரை, அதாவது தைப்பூச தினமான பௌர்ணமி திதி ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?

thaipusam

அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் இருந்து முருகப்பெருமான் ஞானவேலை பெற்ற இந்நாளை நாம் தைப்பூச தினமாகக் கொண்டாடுகிறோம். வேல் என்பது வெற்றியின் சின்னம். வேல் என்றால் ஞானம் என்றும் பொருள். வேலின் கூர்மையான பகுதி போல் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும், அகன்ற பகுதி போல் ஞானம் பரந்து விரிந்திருக்க வேண்டும், கீழே உள்ள தடி பகுதி போன்று அறிவு ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.

தைப்பூச விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் ?

thaipusam 2024

முருகனுக்கு சஷ்டி திதியில் விரதம் இருந்தால் குழந்தை பிறக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் கஷ்டங்கள் நீங்கும். இது அனைவருக்கும் தெரியும். தைப்பூசத்தன்று முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால், கேட்டதெல்லாம் கிடைக்கும். வாழ்வில் வெற்றியும், ஞானத்தில் முன்னேற்றமும் விரும்புபவர்கள் தைப்பூசத்தன்று கோயிலுக்குச் சென்று வேல் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?

murugan

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் அனுசரிக்கப்படுவதால் காலை முதல் இரவு வரை முருகனை நினைத்து விரதம் இருந்து முருகனை தரிசனம் செய்து வழிபடுவது நல்லது. இந்நிலையில் காலை, மதியம் பால், பழங்கள் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலில் வழிபாடு செய்வது நல்லது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால், முருகன் கோவிலுக்கு காலையிலும் மாலையிலும் செல்வது மேலும் சிறப்பை சேர்க்கும்.

தைப்பூச நாளில் வீட்டில் முருகன் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். பாயாசம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் இனிப்புகளை நைவேத்யமாக படைத்து முருகனை வழிபடலாம். எதுவும் செய்ய முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழம், ஒரு வெற்றிலை பாக்கு வைத்து முருகப்பெருமானை வழிபடுங்கள். அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். அன்றைய தினம் முருகன் தொடர்பான சில மந்திரங்களையும் பாடல்களையும் பாடி முருகனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும்.

முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருக்கிறார்கள். மார்கழி முதல் தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். இந்த நாளில் தான் பார்வதி தேவி முருகனுக்கு ஞானவேல் வழங்கினார். அதனால் தான் அன்று வேலை வழிபாடு செய்வது நல்லது. ஞான பண்டிதர் இந்த ஞானவேல் கொண்டு அசுரவதத்தைப் புரிந்தார் என்பது வரலாறு.

தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுவதால் தீய சக்திகள் நம்மைத் துன்புறுத்தாது. வறுமை ஒழிந்து செல்வமும் வசதி வாய்ப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் குரு, சிவன், முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதையும் படிக்கலாம் : வெற்றி தரும் முருகன் துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *