வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 19

வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் – தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு – தொழில்தானே

விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ – துளதோதான்

குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு – வடிவேலா

குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி – மருகோனே

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு – முருகோனே

செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *