கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் – முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற – வுணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் – முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கண்டுமொழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 39