நாச்சியார் திருமொழி – விண்ணீல மேலாப்பு

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்கும் இது தமக்கோர் பெருமையே (1)

மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே (2)

ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே (3)

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வர்க்கு
என்னாகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே (4)

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றூமினே (5)

சலங்கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே (6)

சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே (7)

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கில் அம் பழவிலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே (8)

மத யானை போல் எழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே (9)

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரை செய்
மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே (10)

நாச்சியார் திருமொழி – சிந்துரச் செம்பொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *