கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது. தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36-வது ஸ்தலமாகும். இந்த கோயில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாகும்.
மூலவர் | அக்னீஸ்வரர் |
அம்மன்/தாயார் | கற்பகாம்பிகை |
தல விருட்சம் | புரச மரம் |
தீர்த்தம் | அக்னி தீர்த்தம் |
கட்டடக்கலை வடிவமைப்பு | திராவிடக் கட்டிடக்கலை |
அமைத்தவர் | சோழர் |
ஊர் | கஞ்சனூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
தல வரலாறு
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி, ருத்ராட்சம் அணிவதையே விரும்பினான். எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடினான்.
சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும், ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இடவேண்டும் என கறாராக சுதர்சனிடம் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தும் சிவன் கோவிலுக்கே போனார்.
தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்த சுதர்சன் சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்.
சிவபெருமான் சுதர்சனரிடம் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்று சொன்னார். சுதர்சனர் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணி வித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.
ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.
கோயில் அமைப்பு
கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன.
தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.
தல பெருமை
பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீங்குதல், கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்குதல், கலிக்காமருக்கு திருமணம் செய்தல், மானகாஞ்சரா அவதாரத்தை வழிபடுதல் ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதாரம்.
மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற, நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு “கவி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க ஹரதாதா என்ற பெயரில் விஷ்ணு சிவனை இங்கு வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.
சுக்ரன்
நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சிவபெருமானே, சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.
நிறம் | வெண்மை |
வாகனம் | முதலை |
தான்யம் | மொச்சை |
உணவு | மொச்சைப் பொடி கலந்த சாதம் |
வச்திரம் (துணி) | வெள்ளைத் துணி |
மலர் | வெண் தாமரை |
இரத்தினம் | வைரம் |
ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும்.
சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.
அக்னி தீர்த்தம்
அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால், ’பாண்டு ரோகம்’நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மாவின் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தலத்து இறைவனை வழிபட்டு நோய் தீர்த்தார். இதனால் இத்தலத்தின் இறைவனுக்கு, அக்னீஸ்வரர் என்றும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
தல சிறப்பு
- இத்தலத்தில் சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த திருத்தலம் இது.
- இத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கையாகும்.
- சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.
- நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது.
- இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார்.
- பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் “முக்தி தாண்டவ மூர்த்தி’ என அழைக்கப்படுகிறார்.
திருவிழா
தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, மாசி மகம், ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்
செல்வம் செழிக்கவும், உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.
நடை திறந்திருக்கும் நேரம்
காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும்.
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,
கஞ்சனூர்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609 804.
தொலைபேசி எண் : +91- 435 2473737