ஐப்பசி பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நாளில் சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். அன்னம் என்பதற்கு உட்கொள்வது என்று பொருள் உண்டு.
அன்னாபிஷேக நாளில் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும்.
பிரம்மன் தான் சிவனுக்கு நிகரானவர் என்று நினைத்தார். எனவே சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையைத் தன் கைகளால் வெட்டினார். இதனால், துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையை பிடித்தது. ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
சிவனின் கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை எடுக்கும் பாத்திரமாக மாறியது. பிச்சை பாத்திரத்தில் சிவன் அன்னத்தை ஊற்றும்போது தான் கபாலம் சிவனின் கையை விட்டு விலகும் என்பது சிவபெருமானுக்கு இட்ட சாபம். சிவபெருமான் பிச்சைக் கிண்ணத்துடன் காசிக்குச் சென்றபோது, அன்னபூரணி அவருக்கு அன்னமிட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதைத் தொடர்ந்து பிரம்மாவின் தலை கீழே விழுந்ததால், ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அன்னபூரணி சிவனுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி.
அதனால்தான் அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் 11 விதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த அபிஷேகங்களில் சிறந்தது அன்னாபிஷேகம்.
அன்னதானம் சிறந்த தானமாக இருந்து வருகிறது. உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் உணவு இருக்க வேண்டும். அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது. அந்த வேத உண்மையை சொல்லும் விதமாக ஐப்பசி பௌர்ணமி நாளில் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
சோறு இருக்கும் இடத்தில் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அன்னாபிஷேகத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவனை தரிசிப்பவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைய முடியும் என்பது இதன் பொருள்.
அன்னாபிஷேகம் தரிசனம் செய்வதன் மூலம் தீராத தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் பிரச்சனைகள் தீரும். லாபம் அதிகரிக்கும்.
அன்னாபிஷேக நாளில் இறைவனின் மேனியில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கம் என்பதால் அன்றைய தினம் சிவ தரிசனம் செய்தால் அது கோடி சிவ தரிசனம் செய்ததற்கு சமம்.