2022 அட்சய திருதியை மே 3ம் தேதி செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் சித்திரையில் வளர்பிறையில் வரக்கூடியை திருதியை திதி தினத்தில் தான் இந்த அட்சய திருதியை எனும் பொன் நாள் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதி
அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
அட்சய திருதியை என்பது வெறும் தங்கத்தை வாங்கும் நாள் என நம்மை வணிக ரீதியாக மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றோம். தங்கம் ஒரு மங்களகரமான பொருள் தான் ஆனால், அதை வாங்கியே தீர வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளோம்.
அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதற்கு மட்டுமல்ல! அன்றைய நாளில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது உண்மை. நம்மால் வாங்க முடிந்த பொருட்களை அன்றைய நாளில் வாங்கினால் அந்த பொருளானது அதிக நாட்கள் நீடித்து உழைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும். அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள். கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடுதல், பித்ரு காரியம், இறைவனை வழிபடுதல், நாம ஸ்மரணை மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்தல்.
அட்சய திருதியை சிறப்புகள்
பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்!
ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான்!
கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம்.
செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை!
திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்!
வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.
இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்னபூரணியான அம்பிகையிடம், பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்த சிவபெருமான், பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம்.
பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம” என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.
கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.
அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்
அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம். ஏனென்றால் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.
தங்கம் வாங்குங்கள் என்று எதிலும் குறிப்பிடவே இல்லை. மாறாக, ஒரு குந்துமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம். அதேபோல், புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள்; ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும்.
தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.
இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.
அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
பித்ரு தர்ப்பணம்
பசுவிற்கு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன வாழ அட்சய திருதியை நாளில் இறைவனை வேண்டுவோம்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்
சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.
சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.
குழந்தைக்கு அன்னப் பிராசனம்.
வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.
நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.