அந்தகன் வருந்தினம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 22

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்தத மும்வந்துகண் டரிவையர்க்
கன்புரு குசங்கதந் தவிரமுக் – குணமாள

அந்திப கலென்றிரண் டையுமொழித்
திந்திரி யசஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் – கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் – தணியாத

சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் – படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் – கருமாளக்

குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் – ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் – திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அமுத உததி விடம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 23 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *