நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக ஞானிகளெல்லாம் ஆண்டிக் கோலத்தைக் காண்பார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் ஆவார். மேலும், வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியவர் செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால் தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வர முடிந்தது.
பழனியாண்டவர்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது திருத்தலம்- ‘திருஆவினன்குடி’எனப் போற்றப்படும் பழநி. வயல்களைக் குறிக்கும் சொல் பழனம். பழனங்கள் சூழ இருப்பதால் இத்திருத்தலம் பழநி என வழங்கப்பட்டது. வையாபுரி என்றும் பழநிக்கு மற்றொரு பெயரும் உண்டு.
மலையடிவாரத்தில் உள்ள மயில் மண்டபத்திலிருந்து படியேற வேண்டும். அங்குள்ள பிள்ளையாரை வணங்கினோம். ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
பழனியில் முருகனுக்கு செய்யப்படும் அலங்காரங்கள் அதிகாலை விஸ்வரூப அலங்காரம் ஒன்று. அடுத்து ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் முருகனுக்கு செய்யப்படுகிறது.
பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே! அனைவரும் நினைப்பது போல தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. உற்றுப் பார்த்தால் அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
காலை பூஜையின் போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.
காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். மாலை ராஜ அலங்காரம். இரவு முதிய வடிவம்.
காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.
முருகனை எப்போதெல்லாம் ஆண்டிகோலத்தில் தரிசிக்கலாம்?
வாழ்வில் தடை போட்டி பொறமை கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும் பழனி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால் ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள் உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.
முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள் மருத்துவர்கள் கைவிட்ட தீராத நோய்க்கு முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.
மன குழப்பத்தில் இருப்பவர்கள் ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகனை வழிபடலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் எல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.
எதையும் இழக்க துணிந்தவனுக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கும் என்பதன் அடையாளமே அந்த கோலம்.
எப்போது அலங்கார நிலையில் முருகனை வழிபடலாம்?
கல்யாணம் நடக்கும்போதும், வீடு விற்கும்போதும், வாங்கும்போதும், வீடு கட்டிய பின் கிரகப்பிரவேசம் செய்வதற்கு, இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.
பொதுவாக முருகப்பெருமானின் எந்த ஒரு அலங்காரத்தை தரிசித்தாலும், நமக்கு ஞானத்தை தரக்கூடியவர். ஒருவருக்கு ஞானம் கிடைத்தாலே அவன் சரியான பாதையில் சென்று பிரச்னைகளை தீர்த்து, இன்பமான பாதையில் பயணித்து வாழ்கையை வழிநடத்துவான். அதனால் நாம் தவறாது முருகப்பெருமானை வழிபடுவது அவசியம்.
இதையும் படிக்கலாம் : முருகன் பற்றிய சில ருசிகர தகவல்கள்!