அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
அபிநவவி சால பூரண
அம்பொற் கும்பத் – தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் – கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் – றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் – றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் – குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் – கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் – தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : அவனி பெறுந்தோடு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 26