முருகனின் ஆறுபடை வீடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருப்புகழ் பாடல் பற்றி பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் திருப்புகழ்
சந்ததம் பந்தத் ……. தொடராலே
சஞ்சலம் துஞ்சித் ….. திரியாதே
கந்தன் என்று என்று உற்று …… உனைநாளும்
கண்டுகொண்டு அன்பு உற்றிடு வேனோ?
தந்தியின் கொம்பைப் …… புணர்வோனே
சங்கரன் பங்கில் ….. சிவைபாலா
செந்தில் அம் கண்டிக் …… கதிர்வேலா
தென்பரங் குன்றில் …… பெருமாளே.
திருச்செந்தூர் திருப்புகழ்
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக …… மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக …… வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி …… விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு …… தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல …… மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத …… மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் …… மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான …… பெருமாளே.
பழனி திருப்புகழ்
வசனமிக வேற்றி …… மறவாதே
மனதுதுய ராற்றி …… லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ …… ரமதாலே
இகபரசெள பாக்ய …… மருள்வாயே
பசுபதிசி வாக்ய …… முணர்வோனே
பழநிமலை வீற்ற …… ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி …… மிகவாழ
அமரர்சிறை மீட்ட …… பெருமாளே.
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல …… பெருமாளே.
திருத்தணிகை திருப்புகழ்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் …… தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் …… கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
பழமுதிர்ச்சோலை திருப்புகழ்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்..!