திரிபலா மருத்துவ மகிமை..!

triphala benefits

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis), கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா.

சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.

ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான ‘கட்டற்ற காரணிகளை’ உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது.

மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது.

உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

இதையும் படிக்கலாம் : கை வைத்தியம்..!

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.

மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் எனப்படும் சுரப்பிகள் உள்ளன.

மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல் பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.

நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது.

இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

இதையும் படிக்கலாம் : நுரையீரல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *