தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை. ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.
சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.
சித்ரகுப்த வழிபாடு
சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்று புராணங்கள் கூறுகின்றன. ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர்’சித்ரகுப்தன்’என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர்.
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. இந்த நாளில் அந்தக் காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், ‘சித்ரகுப்தன் படி அளக்க’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம்.
நவக்கிரக கேதுவின் தேவதை ‘சித்ரகுப்தர் எனவே கேதுவினால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள் சத்ரு துன்பங்கள் நீங்கும். சித்ராபௌர்ணமி விரதம் இருந்தால் நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோஷனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது திருமணத்தடைகள் நீங்கும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது.
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்
சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். பௌர்ணமி தினத்தில் அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. தாய் கிரகமான சந்திரன் தந்தை கிரகமான சூரியனிடம் இருந்து வெப்ப ஒளியைப்பெற்று, பூமிக்கு குளிர்ந்த ஒளியைக் கொடுக்கும். சந்திரன் மிகப் பிரகாசமாகவும்,களங்கம் இல்லாமலும் மிக அதிக சக்திமிக்கதுமாக ஒளிர்கிறது.எனவேதான் அன்றைய தினம் ஆற்றங்கரைகளில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகின்றனர்.
சித்ரா பௌர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அந்தநாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை.
சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் குளித்து முடித்துவிடுங்கள். முன்னதாக, இல்லத்தை தண்ணீர் விட்டு, நன்றாகத் தூய்மையாக்கி விடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.
குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்துக்கு உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.
இதையும் படிக்கலாம் : குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!
சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். உப்பில்லாத உணவுகளையே சாப்பிட வேண்டும்.
குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியக் கடமை. எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.
அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
பூஜை செய்த பிறகு, நிறைவாக, பயறு வகைகள் கொண்டு சுண்டல் அல்லது கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
இதுவரை வீட்டில் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அடியோடு விலகிவிடும். அமைதி தவழும். ஐஸ்வர்யமும் சுபிட்சமும் குடிகொள்ளும். இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.