
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி – னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின் – முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் – குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி லெனதுள முருகவும் – வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுகச – லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு – மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையரு – ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஒருவரையும் ஒருவர் (சுவாமிமலை) – திருப்புகழ் 207