இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க – ளுடனுறவாகி
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில – பிணியதுமூடிச்
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென – எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர – இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென – ஒருமயிலேறித்
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் – அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய – மருமகனாகி
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி – வருபெருமாளே.
இதையும் படிக்கலாம் : இரவி என (பழனி) – திருப்புகழ் 116