தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவை தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் தூக்கத்தை இயற்கையாக வரவழைக்கின்றன. இதில் இருக்கும் டிரிப்டோபன் என்னும் அமிலம் தூக்கத்தை உண்டாக்கும் மெலட்டோனின் என்னும் சுரப்புக்கு உதவி புரிகிறது.
பாதாம்
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. இது தூக்கத்திற்கான ஹார்மோனை சுரக்கச் செய்து தூக்கம் வர வைக்கும்.
பால்
இரவு உணவுக்குப் பிறகு நன்றாக காய்ச்சிய பாலை மிதமான சூட்டில் அருந்தி வரும் போது இடைவெளியில்லாத ஆழ்ந்த தூக்கத்தை உணரலாம் பாலில் நிறைந்திருக்கும் கால்சியம் சத்துகள் இதற்கு துணைபுரிகின்றன. அதுமட்டுமல்லாமல் வைட்டமின் டி, ட்ரிப்டோஃபேன் சத்தும் இதில் உள்ளது. பொதுவாகவே தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் பால் பொருள்களை எடுத்துகொள்வது நல்ல பலன் தரும்.
கீரைகள்
கீரைகளில் மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. பாலக் சப்பாத்தி போன்று கீரை கலந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இரவில் கீரையைத் தவிர்ப்பவர்கள் பகல் நேர உணவின் போது எடுத்துகொள்ளலாம். கால்சியம் அதிகமுள்ள பசலைக்கீரையை அதிகம் எடுத்துகொள்வது நல்லது.
இதையும் படிக்கலாம் : உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்
ஓட்ஸ்
இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந்திருக்கிறது.
செர்ரிப்பழம்
புளிப்பு நிறைந்த செர்ரிப்பழத்தை தினசரி இரண்டு எடுத்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை இருக்காது. ஊட்டச்சத்துகளைத் தாண்டி தூக்கத்தை உண்டாக்கும் மெலட்டோனினை உள்ளடக்கியிருக்கிறது இந்தப் பழம். அதனால் இரவு பால் குடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று பழங்களை எடுத்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம் வரும்.
சாமந்தி டீ
சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
கொடுக்கப்பட்ட உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் அதிக நேரம் தூக்கத்தைப் பெறலாம் குறிப்பாக இடைவெளி இல்லாத தூக்கத்தை.