
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் – கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் – றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் – கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் – பெறுவேனோ
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் – தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் – புலவோனே
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் – சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : குயில் ஒன்று (திருத்தணிகை) – திருப்புகழ் 262