ஆவாரம் பூவின் மருத்துவப் பயன்கள்..!

health-benefits-of-avarampoo

ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாகும். மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

நீரிழிவு நோய், சருமத்தில் உண்டாகும் வறட்சி, சருமத்தில் உப்புப் படிதல், மற்றும், வியர்வையால் உண்டாகும் துர்நாற்றம், இவைகளை நீக்கி தங்கம் போன்ற மேனியைக் கொடுக்கும்.

ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

நீரிழிவுநோய் கட்டுப்பட

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை சம அளவு எடுத்து, அரைத்து சருமத்தில் முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சிபெறும்.

மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.

கற்றாழை நாற்றம் மாற

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் கலந்து வீசும். இதனால் இவர்கள் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கற்றாழை நாற்றத்திற்குக் காரணம் உடலில் உள்ள வியர்வைத் துளைகளில் படிந்துள்ள கிருமிகளே.

இவர்கள் ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பனைவெல்லம், சுக்கு சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை டீ போல அருந்தி வந்தால் வாசனை திரவியம் இன்றி மேனி நறுமணம் வீசும்.

உடம்பில் உப்பொரிதல் மாற

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பித்தம் அதிகரித்து உடலில் இரத்தம் மாசடைந்து நோய்கள் பல ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த உடல் சூடு தணிய ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு படிப்படியாக குறையும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம் பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

வெள்ளைப்படுதல் உள்ள பெண்கள் ஆவாரம் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி நோய்களையும், கண் நோய்களையும், மூல நோய்களையும், புரையோடிய புண்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அலர்ஜி. அரிப்புகள் ஆகியவற்றையும் நீக்குகிறது.

இதையும் படிக்கலாம் : செண்பகப் பூவின் மருத்துவ குணங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *