தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவாக ஃபிரைடு ரைஸ் மாறியுள்ளது. இன்று அனைத்து உணவகங்களிலும் தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது இந்த ஃபிரைடு ரைஸ்.
ஃபிரைடு ரைஸ் வகைகளாக வெஜ், சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை என பட்டியல் நீள்கிறது. ஆனால் இதை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை, பொதுவாகவே ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஃபிரைடு ரைஸ் எளிதாகச் செய்யக்கூடிய ஓர் சீன வகை உணவு. இது நம் உடல்நலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடியது. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதித்து, அதிக ஆசிட் உருவாக வழிவகுக்கும். ஃபிரைடு ரைஸ், குடலுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும். இதில் உள்ள MSG (Monosodium glutamate) தலைவலியை வரவழைக்கக்கூடியது. இந்த எண்ணெய் சேர்த்த உணவு வயிற்றைக் காலியாக்காமல் நீண்ட நேரம் தங்கியிருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படும்.
ஃப்ரைடு ரைஸை அதிகம் சாப்பிட்டால், இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உயர் ரத்த அழுத்தம் பல இதய நோய்கள் ஏற்பட வழியமைத்துக் கொடுத்துவிடும். இதய நோய்கள் இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது.
அரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிகப் பசியோடு இருக்கும் போது ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும்.
ஃப்ரைடு ரைஸில் சிக்கன், மட்டன் என இறைச்சி சேர்ப்பதால், எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும். இதில் பயன்படுத்தும் இறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதிலும், உத்தரவாதம் இல்லை.
ஃப்ரைடு ரைஸ்க்கு எந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை திரும்பத் திரும்பப் பயன்படுத்திய எண்ணெய் என்றால், அது நம் உடலுக்கு அதிக கொலஸ்ட்ரால் சேர்ப்பது உள்பட, எத்தனையோ உடல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
இதையும் படிக்கலாம் : தொப்பை குறைய 13 வழிகள்
ஃப்ரைடு ரைஸ் சாப்பிட ஆசைப்படுகிற குழந்தைகளுக்கு கொடுக்காமல் எப்படி? வாரத்துக்கு ஒருமுறை நாம் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே குறைவான எண்ணெய் ஊற்றி சமைத்து கொடுப்பது நல்லது.