இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி – லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு – வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக – மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை – வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் – மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை – யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக – மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : இருகனக மாமேரு (பழனி) – திருப்புகழ் 117