இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் – திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் – குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் – றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் – கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் – துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் – பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் – பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : இலகிய களப (பழனி) – திருப்புகழ் 119