இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு – மைந்தரோடே
இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு – மெங்கள்வீடே
வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு – நிந்தையாலே
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ – தெந்தநாளோ
குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய – மண்டுநீரூர்
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை – வண்டலாடா
முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு – செந்தில்வாழ்வே
முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் – தம்பிரானே.
இதையும் படிக்கலாம் : உததியறல் மொண்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 34