திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்..!

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய

பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு (1)

 

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த

போதமும் காணாத போதமாய் – ஆதிநடு (2)

 

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்

பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த (3)

 

குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்

செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு (4)

 

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே

மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் (5)

 

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்

தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத (6)

 

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்

காரணமும் இல்லாக் கதியாதித் – தாரணியில் (7)

 

இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்

தந்திரத்தில் சாராது சார்வதுபோல் – முந்தும் (8)

 

கருவின்றி நின்ற கருவாய் அருளே

உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் (9)

 

ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல

போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து (10)

 

உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்

பருவ வடிவம் பலவாய் – இருள்மலத்துள் (11)

 

மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல

பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் (12)

 

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்

பெந்த முறவே பிணிப்பத்து – மந்த்ரமுதல் (13)

 

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்

கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் (14)

 

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்

ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் – தீர்வரிய (15)

 

கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்

சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய (16)

 

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்

நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் (17)

 

தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே

நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் (18)

 

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்

சரியைகிரி யாயோகம் சார்வித்து – அருள்பெருகு (19)

 

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து

ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம் (20)

 

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்

ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த (21)

 

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்

அலமருதல் கண்ணுற்று அருளி – உலவாது (22)

 

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா

நெறியில் செறிந்தநிலை நீங்கிப் – பிறியாக் (23)

 

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்

குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு – திருநோக்கால் (24)

 

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்

ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் – பாழாக (25)

 

ஆணவமான படலம் கிழித்து அறிவில்

காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும் (26)

 

அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்

கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது (27)

 

தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்

நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும் (28)

 

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்

இரவும் கடந்துஉலவா இன்பம் – மருவுவித்துக் (29)

 

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்

வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் (30)

 

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்

வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த (31)

 

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று

ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு (32)

 

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி

ஈன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும் (33)

 

யானெனதென்று அற்ற இடமே திருவடியா

மோனபரா னந்தம் முடியாக – ஞானம் (34)

 

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா

அருளதுவே செங்கை அலரா – இருநிலமே (35)

 

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்

பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம் (36)

 

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்

வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத் (37)

 

துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய

புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் – விண்ட (38)

 

பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு

அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி (39)

 

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்

குலவு மகரக் குழையும் – நிலவுமிழும் (40)

 

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்

சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள் (41)

 

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து

தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும் (42)

 

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப

வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர் (43)

 

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்

முடிக்கும் கமல முகமும் – விடுத்தலாகப் (44)

 

பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்

வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன் (45)

 

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்

மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன் (46)

 

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்

தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த (47)

 

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த

பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம் (48)

 

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்

வேமக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது (49)

 

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்

சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில் (50)

kandha guru kavasam

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்

உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த (51)

 

சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்

கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர் (52)

 

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்

கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத (53)

 

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த

அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன் (54)

 

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்

அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும் (55)

 

நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்

பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி (56)

 

இளம்பருதி நூறா யிரங்கொடி போல

வளந்தரு தெய்வீக வடிவம் – உளந்தனில்கண்டு (57)

 

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்

மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து (58)

 

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்

நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய (59)

 

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்

தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால் (60)

 

ஒத்த புவனத் துருவே உரோமமாத்

தத்துவங்க ளேசத்த தாதுவா – வைத்த (61)

 

கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்

நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி (62)

 

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்

கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் (63)

 

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்

ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ (64)

 

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்

தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து (65)

 

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்

புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப் (66)

 

பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்

தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம் (67)

 

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு

அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில் (68)

 

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்

கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம் (69)

 

தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்

காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ (70)

 

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா

நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள் (71)

 

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்

வந்தநவ நாத மணிமுரகம் – சந்ததமும் (72)

 

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்

ஆக்கி அசைத்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து (73)

 

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே

பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ் (74)

 

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்

பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள் (75)

 

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி

ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து (76)

 

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்

ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம் (77)

 

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்

பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண் (78)

 

எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்

கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு (79)

 

பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்

சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று (80)

 

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்

சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர் (81)

 

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி

நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல் (82)

 

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்

அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் – தன்னிரண்டு (83)

 

கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து

மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய (84)

 

முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்

அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் – சகத்தளந்த (85)

 

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி (86)

 

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்

துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள் (87)

 

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்

மருப்பாயும் தார்வீர வாகு – நெருப்பிலிதித்து (88)

 

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்

செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து – எங்கோன் (89)

 

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்

நடத்தி விளையாடும் நாதா – படைப்போன் (90)

 

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று

உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால் (91)

 

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்

குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும் (92)

 

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப

முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் (93)

 

தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக

வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த் (94)

 

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை

வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக் (95)

 

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்

மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனால் (96)

 

சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய

வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன் (97)

 

வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய

தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு (98)

 

பகைவன் முதலாய பாலருடன் சிங்க

முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த (99)

 

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன் (100)

 

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள் (101)

 

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு (102)

 

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன

மேவத் தனித்துயர்ந்த மேலோனே – மூவர் (103)

 

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்

சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே – மறைமுடிவாம் (104)

 

சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்

தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு (105)

 

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்

வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு (106)

 

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்

ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத் (107)

 

தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த

வள்ளிக் கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து (108)

 

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்

கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே – நாறுமலர்க் (109)

 

கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்

செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும் (110)

 

பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்

பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி (111)

 

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்

பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா (112)

 

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்

எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் (113)

 

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்

அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் (114)

 

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு

அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் (115)

 

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்

எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் (116)

 

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து

உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம் (117)

 

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்

பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை (118)

 

எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து

பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன் (119)

 

இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி

மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து (120)

 

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்

தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய (121)

 

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு

அடியேற்கு முன்னின்று அருள். (122)

இதையும் படிக்கலாம் : கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *