
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய- குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம- யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து – விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு – மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு – முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி – புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு – மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை) – திருப்புகழ் 269