குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு – சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து – நாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள் – தோடோய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து – நீயாண் டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கை – வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு – பார்சூழ்ந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை – வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற – சூராந் தகனே.
இதையும் படிக்கலாம் : குழைக்கும் சந்தன (திருச்செந்தூர்) – திருப்புகழ் 49