
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு – முருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க – ளனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் – வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் – தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு – செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் – பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு – முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : குமர குருபர முருக சரவண (சுவாமிமலை) – திருப்புகழ் 214