
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் – விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் – மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன – மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் – மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை – யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை – புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு – திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கொந்துத் தரு (பழனி) – திருப்புகழ் 151