
திருப்புகழ் 303 அதிரும் கழல் (குன்றுதோறாடல்)
அதிருங் கழல்ப ணிந்து – னடியேனுன்
அபயம் புகுவ தென்று – நிலைகாண
இதயந் தனிலி ருந்து – க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க – அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி – நடமாடும்
இறைவன் தனது பங்கி – லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து – விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே.
திருப்புகழ் 304 எழுதிகழ் புவன (குன்றுதோறாடல்)
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் – வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ – தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு – முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ – தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள – மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக – குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய – முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய – பெருமாளே.
திருப்புகழ் 305 தறையின் மானுடர் (குன்றுதோறாடல்)
தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு – கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம – யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய – விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் – வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர – அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு – றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக – எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய – தம்பிரானே.
திருப்புகழ் 306 வஞ்சக லோப மூடர் (குன்றுதோறாடல்)
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது – பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி – லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர – முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ – லருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு – சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு – தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி – வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஆறு திருப்பதி திருப்புகழ்..!